சென்னை: ஒரே சமயத்தில் ஆயிரக்கணக்கான கட்டுமானத் தொழிலாளர்களுக்கு துறைசார்ந்த பயிற்சி அளித்துள்ளது தமிழக அரசு. பல்வேறு தரப்பினரும் இந்த நடவடிக்கையை வரவேற்றுள்ளனர்.
தமிழக அரசின் கட்டுமான நல வாரியத்தில் பதிவு செய்திருந்த 50,000 பேருக்கு, திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும், பயிற்சி பெறுவோர்க்கு அன்றாட ஊதியம், உணவு, இலவசமாக வழங்கப்படுவதுடன், பயிற்சியின் முடிவில் சான்றிதழ் ஒன்றும் வழங்கப்படும் என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இளையர்களுக்கான புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், கட்டுமானத் துறையில் அரசு கவனம் செலுத்தி வருகிறது.
தமிழகத்தில் இருந்து ஏராளமானோர் கட்டுமானத் துறையில் பணியாற்ற வெளிநாடுகளுக்குச் செல்கின்றனர்.
இந்நிலையில், கட்டுமானத் தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள இளையர்களுக்கு கட்டுமானம், கம்பி வளைப்பு, தச்சு, மின்பணியாளர், பிளம்பர், வெல்டர், இரும்பு வேலை, வண்ணம் பூசுதல், ஏசி மெக்கானிக், கண்ணாடி அமைத்தல், சலவைக்கல் ஒட்டுதல் உள்ளிட்ட தொழில் இனங்களில் பயிற்சி வழங்கப்பட்டது.
இதற்காக அரசுத் தரப்பில் ரூ.45.21 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.
“பொருளியல் வளர்ச்சியில் மனித வளத்தின் திறன் மேம்பாடு மிக அவசியம் என்பதால், இளையர்களுக்கு பல்வேறு துறைசார்ந்த பயிற்சிகளை வழங்க அரசு முன்னுரிமை அளித்துள்ளது.
2030ஆம் ஆண்டு தமிழகத்தின் பொருளியலை ஒரு டிரில்லியன் டாலராக உயர்த்த வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத்தகைய பயிற்சிகள் அந்த இலக்கை அடைய உதவும்,” என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
இந்நிலையில், சென்னையில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் செப்டம்பர் 22ஆம் தேதி முதல் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சார்பாக 50,000 கட்டுமானத் தொழிலாளர்களுக்கு பல்வேறு முன்னணி பயிற்சி நிறுவனங்கள் மூலம் திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்பட்டது.
ஒருவார காலம் நீடித்த இந்தப் பயிற்சியின்போது, ஒவ்வொரு தொழிலாளருக்கும் நாள்தோறும் தலா ரூ.800 வீதம், பயிற்சியாளர் ஊதியமாக வழங்கப்பட்டது.
மேலும், இலவச உணவும் வழங்கப்பட்டதுடன், புதிய தொழில்நுட்பங்கள், மின்னிலக்க அளவிடும் கருவிகளின் பயன்பாடு, சுயதொழில் வாய்ப்பு, பணியிடப் பாதுகாப்பு, உடல்நலன் பேணுதல், அயல்நாட்டு வேலைவாய்ப்பு, நிதி சேமிப்பு குறித்து பயிற்சிகளும் வழங்கப்பட்டன.
செப்டம்பர் 22 முதல் நவம்பர் 18ஆம் தேதி வரை ஏறக்குறைய 21 ஆயிரம் பேர் இந்தப் பயிற்சியில் பங்கேற்று பலனடைந்துள்ளனர் என்றும் பயிற்சியின் முடிவில் அனைவருக்கும் உரிய சான்றிதழ்கள் வழங்கப்பட்டது என்றும் தமிழக தொழிலாளர் துறை தெரிவித்தது.
மிக விரைவில் பயிற்சி பெறுவோர் எண்ணிக்கை 50 ஆயிரத்தைத் தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

