தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த இளையர் ஒருவர் ஹாங்காங்கில் வேலைக்குச் சென்றபோது அங்குள்ள இளம்பெண்ணை காதலித்து தனது சொந்த ஊரிலுள்ள கோவிலில் வைத்து திருமணம் செய்துகொண்டார்.
பொறியியல் பட்டக்கல்வியை முடித்த காத்தமுத்து என்கிற மணிகண்டன், 31, ஹாங்காங்கில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார்.
அங்கு கடந்த ஈராண்டுகளாக செல்சீ எனும் 27 வயதுப் பெண்ணைக் காதலித்து வந்தார். இவர்களது காதலுக்கு இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து செல்சீயை தனது சொந்த ஊரில் முறைப்படி திருமணம் செய்துகொள்ள மணிகண்டன் ஏற்பாடு செய்தார். இதற்கு காதலியின் வீட்டிலும் சம்மதம் தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து ஹாங்காங்கில் இருந்து செல்சீயின் குடும்பத்தை தனது சொந்த ஊருக்கு மணிகண்டன் அழைத்து வந்தார். புதுக்கோட்டை திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவிலில் இந்து முறைப்படி செல்சீயை மணிகண்டன் வியாழக்கிழமை (ஜனவரி 26) திருமணம் செய்துகொண்டார்.
தமிழ்நாட்டின் பாரம்பரிய முறைப்படி மணமகளுக்குரிய அடையாளமாக செல்சீ சேலை அணிந்திருந்தார். மணிகண்டன் பட்டு வேட்டி, சட்டை அணிந்திருந்தார். மேளதாளம், நாதஸ்வரம் முழங்க செல்சீயின் கழுத்தில் மணிகண்டன் தாலியைக் கட்டினார். அப்போது கூடியிருந்தவர்கள் மலர் தூவி மணமக்களை வாழ்த்தினர்.
இந்த திருமணம் குறித்து மணிகண்டன் கூறுகையில், ``நான் ஹாங்காங்கில் பணிபுரிந்த இடத்தில் செல்சீயை சந்தித்தேன். அதன்பின் பேசி பழகியதில் எங்களுக்கு இடையே காதல் மலர்ந்தது. இந்திய கலாசாரப்படி திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தோம்.செல்சீயின் அம்மா, அப்பாவிடம் கேட்டு சம்மதம் வாங்கினோம். ஹாங்காங்கில் இருந்து அவர்கள் இங்கு வந்துள்ளனர்,'' என்றார்.
மணமகள் செல்சீ கூறுகையில், ``எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. எங்கள் நாட்டில் உள்ளதைவிட தமிழ்நாட்டில் கலாசாரம் நன்றாக உள்ளது. இது எனக்கு மிகவும் பிடித்துள்ளது. இங்குள்ளவர்கள் என்னிடம் அன்பாக பழகுகின்றனர். என்னை இங்கு எல்லாரும் வரவேற்றனர்,'' என்றார்.

