சென்னை: நடிகர் ரஜினியின் 75வது பிறந்தநாளையொட்டி பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட ஏராளமானோர் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
டிசம்பர் 12ஆம் தேதி பிறந்தநாளை கொண்டாடிய ரஜினிகாந்த் தனது நடிப்பாற்றலால் பல தலைமுறையினரைக் கவர்ந்து பரவலாகப் பாராட்டுகளைப் பெற்றவர் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், ரஜினிகாந்த் வயதை வென்ற வசீகரம் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், கள்ளங்கபடமற்ற நெஞ்சம்; அனைவரையும் மகிழ்விக்கும் சொல்வன்மை மிக்கவர் என்றும் ஸ்டாலின் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, தமிழ்த் திரையுலகில் அசைக்க முடியாத பேராளுமையாக கடந்த 50 ஆண்டுகளாக கோலோச்சி வரும் ரஜினிகாந்துக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துகள் என்று குறிப்பிட்டார்.
‘தமிழ்த் திரையுலகின் மார்க்கண்டேயன், மூன்று தலைமுறைகளை ஆக்கிரமித்தவர், திரை வானில் நட்சத்திரமாக மிளிர்பவர் ரஜினி’ என்று பாராட்டி வாழ்த்தியுள்ளார் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்.

