வீட்டில் அரிய வகை உயிரினங்களை வளர்த்த இளையர் கைது

வீட்டில் அரிய வகை உயிரினங்களை வளர்த்த இளையர் கைது

படம்: பிக்சாபே

27 Nov 2026 - 10:10 pm

1 mins read

சென்னை: சென்னை வனம், வன உயிரினக் குற்றங்கள் கட்டுப்பாட்டுப் பிரிவினருக்குக் கிடைத்த ரகசியத் தகவலின் பேரில், தாம்பரம் வனச்சரக அலுவலர் தலைமையிலான வனத்துறையினர் சோதனை நடத்தினர்.

அவர்கள் கடந்த 25ஆம் தேதி மேடவாக்கம் பொன்னியம்மன் கோயில் தெருவில் உள்ள சிவக்குமார், 26, என்பவரது வீட்டில் சோதனையிட்டனர்.

அப்போது, வன உயிரினப் பாதுகாப்புச் சட்டத்தின் அட்டவணை 1ல் இடம்பெற்றுள்ள அரிய வகை ‘கிரிசில்ட்’ அணில் அங்கு இருப்பது கண்டறியப்பட்டது.

மேலும், உரிய பதிவுச் சான்றிதழின்றி ‘சன்கானூர்’ பறவை ஒன்றும் ஆப்பிரிக்க பச்சைக்கிளிகள் ஆறும் வளர்க்கப்பட்டுவந்தது தெரியவந்தது.

அத்துடன், இரு பச்சை நிற உடும்புகள், ஒரு சிவப்பு நிற உடும்பு என மொத்தம் மூன்று இளவயது உடும்புகள் வளர்க்கப்பட்டதும் கண்டறியப்பட்டது.

இதையடுத்து, அவ்வுயிரினங்களைக் கூண்டுகள், நெகிழிப் பெட்டிகளுடன் வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

தொடர்ந்து, சிவக்குமாரைத் தாம்பரம் வனச்சரக அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று வனத்துறையினர் விசாரணை நடத்தினர்.

இது தொடர்பாக, வன உயிரினப் பாதுகாப்புச் சட்டம் 2022ன் கீழ் வழக்குப்பதிவு செய்த வனத்துறையினர், சிவக்குமாரைக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினர்.

பின்னர், அவர் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.

குறிப்புச் சொற்கள்