சென்னை: அந்தமான் கடல் பகுதியில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது, நவம்பர் 26ஆம் தேதி புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அவ்வாறு புயல் உருவாகும் பட்சத்தில் அதற்கு ‘சென்யார்’ எனப் பெயர் சூட்டப்படும்.
இது மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பரிந்துரைத்த பெயராகும். ‘சென்யார்’ என்றால், அரபு மொழியில் ‘சிங்கம்’ என்று பொருள்.
இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், திங்கட்கிழமை (நவம்பர் 24) காலை வரையிலான, முந்திய 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டம் நாலுமுக்கு பகுதியில் 26 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.
நெல்லை மாவட்டம் ஊத்து 25, காக்காச்சி 23, மாஞ்சோலை 21, தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர், குலசேகரன்பட்டினத்தில் தலா 13, தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு 11, காயல்பட்டினம் 10, செங்கோட்டையில் தலா 9 சென்டிமீட்டர் மழை பதிவாகி உள்ளதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தெற்கு அந்தமான் கடற்பகுதியில் அண்மையில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது, மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே வேளையில், தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில், ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதனால் தமிழகத்தில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் கடலோர மாவட்டங்களில் சில இடங்களில் பலத்த தரைக்காற்று வீசக்கூடும் என்றும் வானிலை நிலையம் முன்னறிவித்தது.
“கன்னியாகுமரி, திருநெல்வேலி, துாத்துக்குடி, தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
“சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில், வானம் ஓரளவு மேகமூட்டமாகக் காணப்படும். சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது,” என வானிலை நிலைய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
‘சென்யார்’ புயல் தீவிரமடைந்தால் தமிழகம், புதுவையில் நவம்பர் 29ஆம் தேதிவரை கனமழை நீடிக்கக்கூடும்.

