ஐந்தாண்டுகளில் ரூ.840 கோடி மதிப்புள்ள நெல் வீணானது

2 mins read
baf537e0-c24d-4534-ab07-743fe1f6afe0
சேமிப்பின்போது நெல் இழப்பு ஏற்படுவது அண்மைய ஆண்டுகளில் குறைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். - மாதிரிப்படம்: இந்திய ஊடகம்

சென்னை: சேமிப்புக் கொள்ளளவை அதிகரிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தாலும், கடந்த ஐந்தாண்டுகளில் தமிழ்நாட்டில் நேரடிக் கொள்முதல் நிலையங்களிலும் சேமிப்புக் கிடங்குகளிலும் சேகரித்து வைக்கப்பட்டிருந்த 3.74 லட்சம் டன் நெல்மணிகள் கெட்டு வீணாயின.

இதன்மூலம் 2019-20 முதல் 2023-24 வரை குறைந்தது ரூ.840 கோடி இழப்பு ஏற்பட்டது.

தகவலறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திடமிருந்து பெற்ற தரவுகள் மூலம் இவை தெரியவந்துள்ளதாக ‘நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ செய்தி வெளியிட்டுள்ளது.

பல்வேறு காரணங்களால் ஆண்டிற்கு 65,000 முதல் 125,000 டன் வரையிலான நெல் வீணானதை அத்தரவுகள் குறிப்பிட்டன.

குறிப்பாக, திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை ஆகிய மாவட்டத்தில் இழப்பு அதிகமாக இருந்தது.

2021-22 ஆண்டில் மட்டும் மாநிலம் முழுவதும் 137,000 டன் நெல்மணிகள் வீணாயின. அவ்வாண்டில் மொத்தம் 4.327 மில்லியன் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு, 2.85 மில்லியன் டன் அரிசியாக மாற்றப்பட்டது.

குறைந்தபட்ச ஆதார விலை, நெல் பயிரீடு போன்றவற்றின் அடிப்படையில் நெல் கொள்முதலுக்காக ஆண்டுதோறும் ரூ.5,000 கோடி (S$753.2 மில்லியன்) முதல் ரூ.6,500 கோடி (S$979.2 மில்லியன்) வரை செலவிடப்படுகிறது.

ஒழுகும் கூரைகள், விரிசலுடன் கூடிய சுவர்கள், திறந்தவெளியில் சேமிப்பு எனப் போதிய பராமரிப்பில்லாத அல்லது மோசமாக பராமரிக்கப்படும் சேமிப்பு நிலையங்கள், முறையற்ற வகையில் நெல்லை உலர்த்துவதால் அதிகரிக்கும் ஈரப்பதம், பூச்சிகள், எலிகள் போன்றவற்றால் ஏற்படும் தொற்று, சுமையேற்றுவதில் கையாளும் முறை போன்ற பல காரணிகளால் நெல்லை இழக்க நேர்வதாகச் சொல்லப்படுகிறது.

அதே நேரத்தில், சேமிப்பின்போது நெல் இழப்பு ஏற்படுவது அண்மைய ஆண்டுகளில் குறைந்துள்ளதாகவும் அதனை மேலும் குறைக்க புதிய வசதிகள் கட்டப்பட்டு வருவதாக நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

“எலி, பூச்சித் தொற்று, மோசமான கிடங்குப் பராமரிப்பு, நிர்வாகக் குறைபாடுகள் போன்றவற்றால் ஏற்படும் இழப்புகளுக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள்மூலம் ஈடுசெய்யப்பட்டு வருகிறது. நெல் இழப்பின் அனுமதிக்கப்பட்ட அளவு ஒரு விழுக்காடுதான்,” என்று அதிகாரி ஒருவர் கூறினார்.

தமிழ்நாட்டில் மொத்தம் 914,000 டன் கொள்ளளவுடன் கூடிய 259 சேமிப்புக் கிடங்குகள் செயல்பாட்டிலும், 908,000 டன் கொள்ளளவுடன் கூடிய தற்காலிகக் கிடங்குகளும், 363,000 டன் கொள்ளளவு கொண்ட, பாதி மறைப்புடன் கூடிய 23 கொட்டகைகளும் இருப்பதாக அதிகாரத்துவத் தரவுகள் தெரிவிக்கின்றன.

குறிப்புச் சொற்கள்