சென்னை: இலங்கைத் தமிழர்களை இழிவுபடுத்தும் ‘கிங்டம்’ திரைப்படத்தைத் திரையிட்டால் திரையரங்குகளை முற்றுகையிடுவோம் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “அண்மையில் வெளியான ‘கிங்டம்’ திரைப்படத்தில் இலங்கைத் தமிழர்களைக் குற்றப்பரம்பரை போல, மிகத் தவறாகச் சித்தரிக்கும் வகையிலான காட்சியமைப்புகள் இடம்பெற்றுள்ளதை அறிந்து அதிர்ச்சியடைந்தேன். இலங்கைத் தமிழர்கள், மலையகத் தமிழர்களை ஒடுக்கினார்கள் என ‘கிங்டம்’ திரைப்படத்தில் காட்டப்படுவது வரலாற்றுத் திரிபாகும். இது மிகப் பெரிய மோசடி.
“வரலாற்றில் ஒரு நாளும் நடக்காத ஒன்றை நடந்ததாகக் காட்டி, இலங்கைத் தமிழர்களை மிக மோசமாகச் சித்திரிக்கும் இப்போக்கு கடுமையான கண்டனத்துக்குரியது,” என்றார் சீமான்
விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகியுள்ள ‘கிங்டம்’ படம் ஜூலை 31ஆம் தேதி வெளியானது.
இதனிடையே, சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், அரசியலுக்கு வந்த விஜய் மற்ற கட்சிகளிடம் இருந்து மாறுபட்டு வேறு என்னென் கொள்கைகளை வைத்துள்ளார் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
“மீண்டும் அதே அண்ணா, பெரியார் வழி எனச் சொன்னால் அது சரியல்ல. 60 ஆண்டுகளாக அண்ணா வழியில் ஒருவர் போய்க் கொண்டிருக்கிறார். அவருக்குப் பின்னால் சென்று எப்படி வீழ்த்த முடியும். வேறு கொள்கைகள் இருந்தால்தான் அவர் முன்னால் சென்று சண்டை போட்டு வீழ்த்த முடியும்.
“மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அண்ணா வழியில் சென்று கொண்டிருக்கிறார்கள். நாங்கள் எங்கள் அண்ணன் வழியில் போய்க் கொண்டிருக்கிறோம்.
“விஜயகாந்த் அரசியலுக்கு வந்தபோது அவர் காணாத எழுச்சியா? அதைப் பார்க்காதவர்கள் அவரை மிஞ்சிவிட்டதாக கூறுகிறார்கள்,” என்றார் சீமான்.
தொடர்புடைய செய்திகள்
அவர் தவெக தலைவர் விஜய்யை மறைமுகமாக விமர்சிக்கவே இவ்வாறு கூறியதாகத் தெரிகிறது.