சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் கும்பங்குடி பாலத்துக்கு அருகே இரு அரசுப் பேருந்துகள் மோதிக்கொண்ட விபத்தில் குறைந்தது 11 பேர் மாண்டுவிட்டனர் என்று தமிழக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
காரைக்குடியை நோக்கிச் சென்றுகொண்டிருந்த பேருந்தும் மதுரையை நோக்கிச் சென்றுகொண்டிருந்த பேருந்தும் நேருக்கு நேர் மோதி மோசமான விபத்துக்குள்ளாயின. இவ்விபத்தில் ஒன்பது பெண்கள், ஓட்டுநர் ஒருவர் உட்பட குறைந்தது 11 பேர் உயிரிழந்தனர்; 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
சம்பவ இடத்தில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பப்பட்டு வருகின்றனர். பலரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதால் மரண எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அதிமுக தலைவர் எடப்பாடி பழனிசாமி, தவெக தலைவர் விஜய், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இச்சம்பவம் குறித்து இரங்கல் தெரிவித்துள்ளனர்.
“உடனடியாக மாவட்ட ஆட்சியரையும் சிவகங்கை மாவட்டப் பொறுப்பு அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பனையும் தொடர்புகொண்டு, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உரிய உயர்தர சிகிச்சை கிடைப்பதை உறுதிசெய்திடுமாறு அறிவுறுத்தியுள்ளேன்,” என்று திரு ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் தெரிவித்தார்.
இச்சம்பவம் தமக்கு மிகுந்த அதிர்ச்சி தந்துள்ளதாகக் கூறிய அதிமுக தலைவர் எடப்பாடி பழனிசாமி, “பேருந்து விபத்துகள் தொடரும் நிலையில், சாலைப் பயணங்களுக்கான உரிய பாதுகாப்பு நெறிமுறைகளைப் பேருந்து ஓட்டுநர்கள் மட்டுமன்றி, அனைவரும் தவறாமல் பின்பற்றி, பாதுகாப்போடு பயணங்களை மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்,” என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டார்.
அண்மையில் இதேபோல் தென்காசியில் இரு பேருந்துகள் மோதிக்கொண்டதில் எழுவர் உயிரிழந்தனர்.

