அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு; எதிர்பார்த்த தீர்ப்புதான்; மேல் முறையீடு செய்வோம்: ஞானசேகரன் வழக்கறிஞர்
சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகள் தண்டனை குறைப்பு இல்லாத ஆயுள் தண்டனை விதித்து சென்னை மகளிர் நீதிமன்றம் திங்கட்கிழமை (ஜூன் 2) தீா்ப்பளித்தது.
இந்நிலையில், இது எதிர்பார்த்த தீர்ப்புதான் என்றும் மேல்முறையீடு செய்வோம் என்றும் ஞானசேகரன் தரப்பு வழக்கறிஞர் கோதண்டராமன் தெரிவித்துள்ளார். குற்றவாளி என அறிவிக்கப்பட்டிருக்கும் ஞானசேகரனுக்கு சிறையில் எந்தச் சலுகைகளும் வழங்கக் கூடாது என்று அறிவுறுத்திய நீதிபதி எம். ராஜலட்சுமி, 30 ஆண்டுகள் தண்டனைக் குறைப்பின்றி ஆயுள் தண்டனையுடன் ரூ.90,000 அபராதம் விதித்து உத்தரவிட்டார்.
தமிழகத்தில் பெரும் அதிா்வலைகளை ஏற்படுத்திய இந்த வழக்குத் தொடர்பில் சென்னை மகளிா் நீதிமன்றம் கடந்த மே 28ஆம் தேதி தீா்ப்பளித்திருந்தது.
இந்நிலையில், 11 குற்றச்சாட்டுகள் நிரூபணமானதை அடுத்து, திங்கட்கிழமை ஆயுள் தண்டனை பிறப்பிக்கப்பட்டது.
குறைந்தபட்ச தண்டனை
முன்னதாக, குற்றவாளி ஞானசேகரனிடம் ஏதேனும் சொல்ல விரும்புகிறீர்களா என்று நீதிபதி வினவினார். அதற்கு, ஞானசேகரன், தனது தந்தை இறந்துவிட்டதால் தாயை கவனித்துக்கொள்ள வேண்டியுள்ளது.
எனது 8ஆம் வகுப்பு படிக்கும் பெண் குழந்தை, மனைவியைக் காப்பாற்ற வேண்டும். மேலும், எனது தொழிலும் பாதிக்கப்படும் என்பதால், எனக்குக் குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும் என கண்ணீா் மல்க கோரினார்.
ஆனால், “குற்றவாளி ஞானசேகரனுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும். எந்த ஒரு இரக்கமும் காட்டக் கூடாது.
தொடர்புடைய செய்திகள்
“பல்கலைக்கழக வளாகத்துக்குள் நுழைந்து காட்டுமிராண்டித்தனமான குற்றத்தைச் செய்திருக்கிறாா். அவருக்கு உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும்,” என அரசுத் தரப்பில் வலியுறுத்தப்பட்டிருந்த நிலையில், இப்போது ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஞானசேகரனின் வழக்கறிஞர் கோதண்டராமன் செய்தியாளர்களிடம் கூறியபோது, “ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகள் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தண்டனை வழங்குவதில் எவ்விதமான கருணையும், சலுகையும் காட்டக் கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து 30 நாட்களுக்குள் மேல் முறையீடு செய்யப்படும்.
“ஞானசேகரனிடம் கலந்தாலோசித்துவிட்டு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். ஞானசேகரன் தற்போது தைரியமாகத்தான் இருக்கிறார். இது எதிர்பார்த்த தீர்ப்புதான். அதிகபட்சமாக 30 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இதனை ஏக காலத்தில் அனுபவிக்கவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது,” என்று தெரிவித்தார்.
வழக்கின் பின்னணி
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த டிசம்பர் 23ஆம் தேதி 19 வயதான இரண்டாமாண்டு பொறியியல் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டாா். இதுதொடா்பான புகாரின்பேரில் கோட்டூா்புரம் அனைத்து மகளிா் காவலர்கள், அதே பகுதியில் பிரியாணிக் கடை நடத்தி வந்த கோட்டூரைச் சோ்ந்த ஞானசேகரன் என்பவரை டிசம்பர் 24ஆம் தேதி கைது செய்தனா்.
நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் மூன்று பெண் ஐபிஎஸ் அதிகாரிகளை நியமித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யச் சொன்னது.
கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்ட இந்தக் குற்றப்பத்திரிகையில், 29 சாட்சியங்கள், நூற்றுக்கும் மேற்பட்ட ஆதாரங்கள் இடம்பெற்றன.
இதையடுத்து இந்த வழக்கில் கடந்த 28ஆம் தேதி தீர்ப்பளித்த மகளிர் நீதிமன்றம், ஞானசேகரன் குற்றவாளியென அறிவித்து, அவரின் தண்டனை விவரங்கள் ஜூன் 2ஆம் தேதி அறிவிக்கப்படும் எனத் தீர்ப்பளித்திருந்தது.

