சென்னை: சென்னையில் 42 நாட்களுக்கு பிறகு மாநகரப் பேருந்துகள், மெட்ரோ ரயில்கள் 50% பயணிகளுடன் இயக்கப்பட்டன. மின்சார ரயில்களிலும் கூட்டம் காணப் பட்டது. வாடகை கார்கள், ஆட்டோக்களும் சாலைகளில் அதிகளவில் விரைந்தன.
அனைத்து சாலைகளும் போக்குவரத்து நெரிசலுடன் காணப்பட்ட நிலையில், சென்னையும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களும் நீண்ட நாள்களுக்குப் பின்னா் இயல்புநிலைக்குத் திரும்பியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களிலும் கொரோனா இரண்டாவது அலை ஒரு கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ள நிலையில், கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
மாநில அரசின் உத்தரவின்படி 50% பயணிகள் மட்டுமே பேருந்துகள், மெட்ரோ ரயிலில் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
எனினும், ஒரு சில பேருந்துகளில் பயணிகள் நெருக்கி உட்கார்ந்து பயணம் செய்ததையும் காணமுடிந்தது.
ரயில்களில் நின்றுகொண்டு யாரும் பயணிக்கக்கூடாது என்ற அறிவிப்பும் ஒலிபெருக்கி மூலம் தொடர்ந்து ஒலித்துக்கொண்டு இருந்தது.
அரசு அலுவலகங்கள் 100% ஊழியா்களுடனும் தனியாா் நிறுவனங்கள் 50% ஊழியா்களுடனும் செயல்பட்டன. இந்த நிறுவனங்களைச் ேசர்ந்த ஊழியர்கள் நீண்ட நாள்களுக்குப் பிறகு வேலைக்குத் திரும்பியதால் ரயில்கள், பேருந்துகளில் கூட்டம் அதிகமாக இருந்தது.
பயணிகள் நெரிசலின்றி பயணம் செய்யும் வகையில் 500க்கும் மேலான மின்சார ரயில் சேவைகளும் இயக்கப்பட்டன.
இந்நிலையில், பொதுப் போக்கு வரத்து தொடங்கிய முதல் நாளிலேயே பூந்தமல்லியில் மாநகரப் பேருந்து ஒன்று தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் ஓட்டுநர் உள்பட ஐவர் காயம் அடைந்தனர்.
இதற்கிடையே, செய்தியாளா்களிடம் போக்குவரத்துத் துறை அமைச்சா் ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன் கூறியபோது, "சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூா் ஆகிய மாவட்டங்களுக்கிடையே மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் 1,792 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. விழுப்புரம் அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சாா்பில் 750 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
"பெண்கள், மாற்றுத்திறனாளிகள், அவா்களின் உதவியாளா்கள், திருநங்கைகள் ஆகியோர் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணம் செய்ய முதல்வர் அனுமதி வழங்கியுள்ளாா். அதனடிப்படையில், மாற்றுத்திறனாளிகள், அவா்களின் உதவியாளா்கள், திருநங்கை களுக்கு இலவசப் பயணச்சீட்டு இன்று (ஜூன் 23) முதல் வழங்கப்படுகிறது," எனத் தெரிவித்தாா்.

