சேலம்: கடத்தப்பட்ட யானைத் தந்தங்களை கள்ளச் சந்தையில் விற்பனை செய்து பல லட்சங்களில் பணம் சம்பாதித்த ஐவர் கைதாகி உள்ளனர்.
இதுபோல் யானைத் தந்தங்களைக் கடத்தும் சம்பவங்களில் 15 மாவட்டங்களைச் சேர்ந்த 20 பேருக்குத் தொடர்பு இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ள தாக வனத்துறையினர் கூறி யுள்ளனர்.
கோவை மாவட்டம், பெரிய நாயக்கன்பாளையம் பகுதியில் மர்ம ஆடவர்கள் சிலர் யானைத் தந்தங்களைக் கடத்தி வந்து விற்பனை செய்ய உள்ளதாக கோவை வனத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து அங்கு சென்று வனத்துறை அதிகாரிகள் சோதனை செய்தபோது, தந்தங்கள் சிக்க வில்லை. இந்த விற்பனை சேலம் மாவட்டம், வாழப்பாடி பகுதியில் நடக்க இருப்பதாகத் தெரிந்தது.
இதையடுத்து, வாழப்பாடிக்கு விரைந்த தனிப்படையினர் யானைத் தந்தங்களை விலைக்கு வாங்குவது போல் கடத்தல்காரர்களிடம் பேசினர். அப்போது அவர்களிடம் ஒரு தந்தம் ரூ.10 லட்சம் வீதம் இரு தந்தங்களை ரூ.20 லட்சத்துக்கு விற்பதாக கடத்தல்காரர்கள் தெரிவித்தனர்.
அதைத்தொடர்ந்து 11 கிலோ தந்தங்களுடன் வந்த சசிகுமார், சேட்டு, பரத், பிரவீன்குமார், அருண்குமார் ஆகிய ஐவரையும் தனிப்படையினர் கைதுசெய்து, விசாரணை செய்து வருகின்றனர்.

