சேலம்: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், பெரும்பாலான மாவட்டங்களிலும் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் ஒரு சில இடங்களில் வெள்ளப்பெருக்கினால் மக்கள் கடும் பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர்.
திருநெல்வேலி மாவட்டம், களக்காடு அருகே வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு கர்ப்பிணிப் பெண் ஒருவரும் மேலும் ஐவரும் வெள்ளத்தில் சிக்கி இறந்துள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளன.
வெள்ளம் சூழ்ந்துள்ள குடி யிருப்புப் பகுதிகளில் சிக்கித் தவிப் பவர்களைப் பாதுகாப்பாக மீட்க ரப்பா், மோட்டாா் படகுகள், குடியிருப்புகளைச் சூழ்ந்துள்ள வெள்ள நீரை வெளியேற்ற நீர் இறைக்கும் இயந்திரங்கள், மீட்புப்பணிக்கான கயிறுகள் உள்ளிட்ட அனைத்து கருவிகளும் தயார்நிலையில் உள்ளதாக தமிழ்நாடு தீயணைப்பு, மீட்புப்பணிகள் துறையின் இயக்குநா் டிஜிபி கரன்சின்கா தெரிவித்துள்ளார்.
திருப்பூரில் கனமழை காரணமாக 100க்கும் அதிகமான வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.
களக்காடு பகுதியில் நாங்கு நேரியான் கால்வாயில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி சிதம்பரபுரத்தைச் சேர்ந்த முருகன் என்பவரின் மகள் லேகா, 23, உயிரிழந்தார். ஒரு மரத்தில் சிக்கியிருந்த லேகாவின் சடலம் மீட்கப்பட்டது. லேகா ஆறு மாத கர்ப்பிணியாக இருந்தார்.
இதேபோல், திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் உள்ள அரசு ஐடிஐயில் படித்து வந்த தரணீஸ், சுரேந்தர், வெங்கடேஷ், ஆபிரகாம் ஆகி யோரும் அமராவதி ஆற்றில் குளித்தபோது வெள்ளநீரில் அடித்துச்செல்லப்பட்டு இறந்தனர்.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி பகுதியில் பெய்த கனமழையால் வராக நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், அங்குள்ள 11 கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, வெள்ள அபாயம், மக்களைப் பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பது, உணவு வழங்குவது குறித்து காணொளி வழி மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசித்தார். டெல்டா மாவட்டங்களில் பாதிக்கப்பட்டுள்ள சாகுபடிகளைக் கணக்கெடுக்கும் பணிகளை வேளாண் துறையினர் துவக்கி உள்ளனர்.