சென்னை: வடகிழக்குப் பருவமழை தொடர்ந்து நீடிக்கும் என்று முன்னுரைக்கப்பட்டு இருக்கிறது.
குறிப்பாக சென்னை பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறது. தலைநகருக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கடும் மழை தொடர்வதால் பூண்டி, சோழவரம் முதலான ஏரிகள் ஏறக்குறைய நிரம்பிவிட்டன.
இருந்தாலும் சென்னைக்கு 2015ல் ஏற்பட்ட ஒரு நிலை மீண்டும் ஏற்படாது என்று அதிகாரிகள் திட்டவட்டமாகத் தெரிவித்து வருகிறார்கள்.
மாநிலம் முழுவதும், குறிப்பாக சென்னை பகுதியில் நீர்நிலைகள் அணுக்கமாக 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுவதே இதற்குக் காரணம் என்று அவர்கள் கூறினர்.
நீர்நிலைகள் நிரம்பினால் பேராபத்து ஏற்படலாம் என்பதால் பாதுகாப்பிற்காகவும் குடிநீர் தேவைகளைக் கருத்தில் கொண்டும் ஏரிகளில் இருந்து நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அந்தத் தண்ணீர் சென்னை ஆறுகள் மூலம் கடலைச் சென்று சேர்கிறது.
அடையாறு, கூவம், பக்கிங்காம் கால்வாய்களில் வெள்ளம்போல் தண்ணீர் போய்க்கொண்டுள்ளது.
தங்குதடையின்றி கடலுக்கு நீர் செல்ல வேண்டும் என்பதற்காக ராட்சச இயந்திரங்கள் மூலம் அடைப்புகள் அவசர அவசரமாக அகற்றப்பட்டு வருகின்றன.
நீர்நிலைகளை அதிகாரிகள் 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறார்கள். ஆகையால் எவ்வளவுதான் மழை நீடித்தாலும் 2015ல் சென்னை நகரம் மிதந்தது போன்ற ஒரு நிலை இப்போது ஏற்படாது என்று அதிகாரிகள் திட்டவட்டமாக கூறுகிறார்கள்.
கடந்த 2015ல் கடும் மழை பெய்தது. நீர்நிலைகள் ஒரே நேரத்தில் திறந்துவிடப்பட்டதால் சென்னை நகரம் வரலாறு காணா வெள்ளத்தில் சிக்கியது.
இருக்க இடமின்றி, உடுக்க உடையின்றி, உண்ண உணவின்றி பல நாட்களுக்குச் சென்னை மக்கள் அவதிப்பட்ட வேளையில், மின்சாரமும் தடைபட்டுவிட்டது. ஏராளமான பொருட்சேதம் ஏற்பட்டது. மக்கள் தரையைப் பார்ப்பதற்கே பல நாட்கள் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை இருந்தது. அதேபோன்ற நிலை இப்போது வராது என அதிகாரிகள் கூறினர்.
இதை உறுதிப்படுத்த முழுமூச்சாக 24 மணிநேரமும் பல்வேறு நடவடிக்கை களை அதிகாரிகள் எடுத்துவருவதாகவும் மிகவும் கவனமாக நீர்நிலைகளில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்படுவதாக வும் அவர்கள் தெரிவித்தனர்.