தர்மபுரி: 'கல்வி கற்க வயது ஒரு தடையல்ல' என்பதை நிரூபித்துள்ளார் தர்மபுரியைச் சேர்ந்தவரான கே.சிவப்பிரகாசம், 61. ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற இவர், நீட் தேர்வில் அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றதால், சென்னை, ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரியில் நடக்கும் மருத்துவக் கலந்தாய்வில் கலந்துகொள்வதற் காக நேற்று வந்திருந்தார்.
அரசுப் பள்ளி மாணவா்களுக்கு மருத்துவப் படிப்பில் சேர 7.5% உள் ஒதுக்கீட்டின் கீழ் 437 இடங்கள் வழங்கப்படுகின்றன. அந்த தரவரிசைப் பட்டியலில் கே.சிவப்பிரகாசம் 349வது இடத்தைப் பிடித்துள்ளார்.
இருப்பினும் கலந்தாய்வில் பங்கேற்பதா, வேண்டாமா என்ற குழப்பத்துடன் இரட்டை மனநிலையில் இருப்பதாகவும் அவர் சொன்னார். இதற்குக் காரணம் தனது மகன் என்றும் அவர் கூறினார்.
இது தொடா்பாக சிவப்பிரகாசம் கூறுகையில், "கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரியில் பயிற்சி மருத்துவராக உள்ள எனது மகன், இந்த வயதில் நான் மருத்துவம் படிப்பதை விரும்பவில்லை. என்னை கலந்தாய்வில் கலந்துகொள்ள வேண்டாம் என அறிவுறுத்தி உள்ளார். ஏனெனில், எனது இந்த 61 வயதில் நான் மருத்துவம் படித்து முடித்து அதிகபட்சமாக 15 ஆண்டுகள் வரைதான் என்னால் சேவையாற்ற வாய்ப்புள்ளது. நான் கலந்தாய்வில் பங்கேற்காவிட்டால் அந்த இடம் ஒரு இளம் மாணவருக்கு கிடைக்கும். அதன்மூலம் அவா் 40 முதல் 50 ஆண்டுகள் வரை மருத்துவச் சேவையாற்ற முடியும் என எனது மகன் கூறினார்.
"ஒரு மாணவருக்கு என்னால் வாய்ப்பு பறிபோகக்கூடாது என்பது என் மகனின் கருத்து," என்றார் சிவப்பிரகாசம்.
எனினும், கலந்தாய்வுக்கு எனது மாணவா் ஒருவருடன் சென்னைக்கு வந்துள்ளேன்.
"அதேசமயத்தில், ஒரு ஓய்வு பெற்ற ஆசிரியராக, ஒரு மாண வனின் மருத்துவ இடத்தையும் நான் தட்டிப் பறிக்க விரும்பவில்லை. நான் கலந்தாய்வில் பங்கேற்காமல், ஓர் இளைஞருக்கு அந்த வாய்ப்பு கிடைத்த மகிழ்ச்சியுடன் வீட்டுக்குச் செல்வேன்," என்கிறார் இவர்.
மனிதரில் மாணிக்கம் என்றும் மனிதநேயம் உயிரு டன்தான் உள்ளது என்றும் குரு என்பவர் தெய்வத்துக்கு நிகரானவர் என்றும் மக்கள் இவரைப் பாராட்டி வருகின்றனர்.
நீட் தேர்வில் தேர்ச்சி பெற சிறப்பு வகுப்புகள் எதற்கும் செல்லவில்லை. எனது பாடம் நடத்தும் அனுபவமே என்னைத் தேர்ச்சி பெற வைத்தது. மகனின் விருப்பப்படி எனது வாய்ப்பை மற்றொரு மாணவருக்கு விட்டுக்கொடுப்பேன்.
கே.சிவப்பிரகாசம்

