பத்து ஆண்டுகளுக்கு மேலாக வீட்டில் அடைக்கப்பட்ட 72 வயது பெண்ணைச் சமூக நல அதிகாரிகள் மீட்டுள்ளனர்.
அந்தப் பெரியவர் பலவீனமான நிலையில் வீட்டில் நிர்வாணமாக படுத்துக்கிடந்த காணொளிகள் சமூக ஊடகங்களில் பரவலாக பகிர்ந்துகொள்ளப்பட்டதைத் தொடர்ந்து அவர் மீட்கப்பட்டார்.
தமிழ்நாட்டின் தஞ்சாவூரில் இந்தப் பரிதாப சம்பவம் நடந்தது.
72 வயதான ஞானஜோதி தமது மகன்களால் சொந்த வீட்டிலே கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பூட்டிவைக்கப்பட்டார். 2009ஆம் ஆண்டு தமது கணவர் காலமான பிறகு, அவர் தமது மகளுடன் வசித்துவந்தார். 2011ஆம் ஆண்டு மகளும் நோய்வாய்ப்பட்டு உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து அவருடைய இரண்டு மகன்கள் அவரை வைத்துபார்க்க மறுத்துவிட்டனர். பெற்ற தாயை வீட்டிலே பூட்டிவைத்து அடைத்துவிட்டனர். வாரத்துக்கு ஒரு முறை மட்டும் தாய்க்கு உணவு கொடுக்க அவர்கள் அந்த வீட்டுக்குச் சென்றனர். பெரும்பாலான சமயங்களில் ஞானஜோதி உணவுக்கும் தண்ணீருக்கு அண்டைவீட்டாரை நம்பியிருந்தார்.
பல ஆண்டுகளாக தனிமையில் வாடியிருந்ததால், அவருக்கு மனநலன் பாதிக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரியான மூத்த மகனுக்கு ஓய்வூதியம் கிடைத்தாலும், தம்முடைய தாயைப் பேண அவர் தவறிவிட்டதாக அதிகாரிகள் குறிப்பிட்டனர். மற்றொரு மகன் தூர்தர்ஷன் நிறுவன ஊழியர்.
முதியோர் சட்டத்தின் கீழ் இரண்டு மகன்களுக்கு எதிராக குற்றச்சாட்டு கொண்டுவருவது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்திவருகின்றனர்.

