சென்னை: கடந்த ஓராண்டில் மட்டும் சென்னை விமான நிலையத்தில் ரூ.262 கோடி மதிப்புள்ள பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
அவற்றுள் கடத்தல் தங்கம், போதைப் பொருள்கள்தான் அதிக அளவில் சிக்கியுள்ளன.
சென்னை விமான நிலையத்தைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதேசமயம் வெளிநாடுகளில் இருந்து சட்டத்துக்குப் புறம்பாக பல பொருள்களை எடுத்து வருவதும் அதிகரித்து வருவதாக சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக, தங்கம், போதைப்பொருள் கடத்தல் சம்பவங்கள்தான் அதிகமாக பதிவாகி உள்ளன.
கடந்த ஆண்டு ரூ.262 கோடி மதிப்புள்ள பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில், அவற்றுள் ரூ.70 கோடி மட்டுமே கடத்தல் தங்கத்தின் சந்தை மதிப்பாகும். மொத்தம் 157 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
இது தொடர்பாக 234 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. 144 பேர் கைதாகி உள்ளனர். இவர்களில் 20 விழுக்காட்டினர் பெண்கள் ஆவர். இதேபோல் கடந்த ஆண்டில் ரூ.181 கோடி மதிப்பிலான போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன என்றும் அவற்றுள் ரூ.170 கோடி மதிப்புள்ள 25.44 கிலோ ஹெராயினும் அடங்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக 41 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 12 பேர் கைதாகி உள்ளனர்.
இதைத் தவிர, சென்னை விமான நிலையத்தில் 11 கோடி ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டுப் பணம் சிக்கியுள்ளது. உரிய ஆவணங்கள் இன்றியும் மறைத்து வைத்தும் கொண்டு வரப்படும் வெளிநாட்டுப் பணம் சுங்கத்துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்படுகிறது. இந்த குற்றத்துக்காக 43 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 36 பேர் கைதாகி உள்ளனர்.
இதைத்தவிர, மின்னணு சாதனங்கள், வெளிநாட்டு மது, சிகரெட் வகைகள் ஆகியவையும் கடத்தி வரப்படுகின்றன.
அண்மைக்காலமாக, தங்கக் கடத்தலில் ஈடுபடுவோர் அதை தங்கக்கட்டிகளாகவோ, நகைகளாகவோ கொண்டு வருவதில்லை. தங்கத்தை பசை போன்று மாற்றி எடுத்து வருகிறார்கள். எனவே, கடத்தலைக் கண்டுபிடிப்பது அதிகாரிகளுக்கு சவாலான பணியாக உள்ளது.
தங்கக் கடத்தலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டால் மட்டுமே கடத்தல் சம்பவங்கள் குறையும் என்று சுங்கத்துறை வலியுறுத்தி உள்ளது.

