சென்னை: கள்ள வாக்களிப்பை தடுக்கும் முயற்சியாக வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கும் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஆறு கோடிக்கும் அதிகமான வாக்காளர்களுக்கு வாக்குச்சாவடி அதிகாரிகள் வீடு வீடாகச் சென்று அதற்கான படிவத்தை விநியோகிக்கவிருக்கின்றனர்.
கள்ள வாக்களிப்பு, வாக்காளர் பட்டியலில் இரட்டைப் பதிவு, உயிரிழந்தவர்கள் பெயர் பட்டியலில் இடம்பெற்று இருப்பது, இடம் மாறி குடியேறிய வாக்காளர்களின் விவரங்கள் மாறாமல் இருப்பது போன்ற பிரச்சினைகள் சவால் களாக இருப்பதாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தப் பிரச்சினைகளை சரி செய்ய வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்க முடிவு செய்யப்பட்டது. நாடு தழுவிய அளவில் இந்த நடவடிக் கையை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு உள்ளது. தமிழகத்திலும் இந்தப் பணிகள் நேற்று தொடங்கப்பட்டுள்ளன.
இதற்காக '6பி' என்ற படிவம் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த படிவத்தை பூர்த்தி செய்து அளித்தால் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண் இணைக்கப்படும். இதற்காக வாக்குச்சாவடி அலுவலர்கள் வீடு வீடாகச் சென்று படிவத்தை விநியோகிக்கவிருக்கின்றனர்.
வாக்காளர் பட்டியலில் ஆதார் எண் இணைக்கப்பட்டதும் போலி வாக்காளர்கள் முற்றிலும் ஒழிக்கப்படுவர் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

