சென்னை: விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் எனில், அது குறித்த அறிவிப்பை அவரே நேரடியாக வெளியிட்டால் மட்டுமே நம்பிக்கை ஏற்படும் என அவரது பாதுகாவலர்களாக செயல்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், இலங்கையில் இறுதிப்போர் நடந்த வேளையில், 2009ஆம் ஆண்டு மே மாதம் 15 ஆம் தேதி வரை பிரபாகரன் களத்தில் இருந்து போராடியதாகவும் அதன் பின்னர் அவருக்கு என்னவானது என்பது தெரியாது என்றும் அவர்களில் சிலர் கூறிஉள்ளனர்.
பிரபாகரன் உயிரோடு இருப்பதாக பழ.நெடுமாறன் திடீர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பழ.நெடுமாறனுக்கு ஆதரவாகவும் எதிராகவும் கருத்துகள் வெளியான வண்ணம் உள்ளன. தனது மகன்கள் உள்பட ஒட்டுமொத்த குடும்பத்தையும் பலி கொடுத்துவிட்டு பிரபாகரன் தப்பிச் சென்றிருக்க வாய்ப்பில்லை என்று ஒருதரப்பினர் கூறுகின்றனர்.
அதே வேளையில், நெடுமாறன் கூறுவதை லேசாகக் கருத முடியாது என்றும் மற்றொரு தரப்பு கூறி வருகிறது.
இந்நிலையில், பிரபாகரனின் பாதுகாவலர்களாக இருந்த சிலர் தங்களுக்குத் தெரிந்த தகவல்களை வெளியிட்டு வருகின்றனர்.
இறுதிப்போரின் போது நந்திக் கடல் பகுதியில் என்ன நடந்தது என்பது யாருக்கும் தெரியாது என்றும் அதே சமயம் இலங்கை ராணுவம் காட்டியது பிரபாகரனுடைய உடல் அல்ல என்றும் சிலர் கூறியுள்ளனர்.
மேலும், போரின் இறுதி நாள்களில் பிரபாகரன், தனது பாதுகாவலர்கள் உட்பட யாருடனும் தொடர்பில் இல்லை என்றும் அவரது பாதுகாவலர்கள் தெரிவித்ததாக ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
இந்நிலையில், பிரபாகரன் கொல்லப்பட்டது உறுதி என இலங்கை ராணுவம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
