முதியவர்கள் மாற்றுத் திறனாளிகளிடம் இரண்டாவது நாளாக வாக்குச் சேகரிப்பு
ஈரோடு: இடைத்தேர்தல் நடைபெறும் ஈரோடு கிழக்குத் தொகுதியில் அரசியல் கட்சித் தலைவர்களும் நிர்வாகிகளும் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வீடு, வீடாகச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ள தொண்டர்கள் தங்கள் கட்சி வெற்றிபெறுவது உறுதி என கூறி வருகின்றனர்.
இம்முறை 77 சுயேச்சைகள் போட்டியிடுவதால், ஈரோடு கிழக்குத் தொகுதியில் எங்கு பார்த்தாலும் வேட்பாளர்கள் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுள்ளதைக் காண முடிகிறது.
தேர்தலுக்கு இன்னும் சில நாள்களே உள்ளதால் தேர்தல் களம் நாளுக்கு நாள் சூடுபிடித்து வருகிறது.
திமுக ஆதரவுடன் களமிறங்கியுள்ள காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்குத் துணையாக இருபதுக்கு மேற்பட்ட அமைச்சர்கள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
அதிமுக கூட்டணியைச் சேர்ந்த தலைவர்கள், நிர்வாகிகளும் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
திமுக ஆட்சிக்கு வந்து நடைபெறும் முதல் இடைத்தேர்தல் என்பதால் பெரும் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற வேண்டும் என்று கட்சித் தலைமை உத்தரவிட்டுள்ளதால், திமுகவினர் வீடு, வீடாகச் சென்று அரசு செயல்படுத்தி உள்ள பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து வாக்காளர்களிடம் விவரித்து வருகின்றனர்.
இத்தொகுதிக்கான வாக்காளர் பட்டியலில் ஐம்பதாயிரம் போலி வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளதாக அதிமுக தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் நீதிமன்றத்திலும் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இடைத்தேர்தல் நேர்மையான முறையில் நடத்தப்படும் என தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனினும், வாக்காளர்களுக்கு பணம் வழங்கப்படுவதாகவும் ஆயிரக்கணக்கான வாக்காளர்கள் கூடாரங்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அதிமுக குற்றம்சாட்டி உள்ளது.
காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் அதிமுக வேட்பாளர் தென்னரசு, தேமுதிகவின் ஆனந்த், நாம் தமிழர் கட்சியின் மேனகா நவநீதன் உள்ளிட்டோர் காலை முதல் இரவு வரை ஓய்வின்றி தீவிர பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.