சென்னை: துபாயில் அடுக்குமாடிக் குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தின்போது அங்கு இருப்பவர்களைக் காப்பாற்ற முயன்றதமிழகத்தைச் சேர்ந்த இருவர் பலியானது தெரியவந்துள்ளது.
கடந்த சனிக்கிழமையன்று அக்குடியிருப்பின் நான்காவது தளத்தில் இந்தத் தீ விபத்து ஏற்பட்டது. இதில் 16 பேர் உயிரிழந்தனர். அவர்களில் நான்கு பேர் இந்தியர்கள் ஆவர்.
அவர்களில் தமிழகத்தைச் சேர்ந்த 43 வயதான இமாம் காசிம் அப்துல் காதர், 49 வயதான ஹுடு சலிய குண்டு ஆகியோரும் அடங்குவர்.
பலியான மற்ற இருவரும் கேரளாவைச் சேர்ந்த ரிஜேஷ் (38 வயது), ஜெஷி (32 வயது) தம்பதியர் ஆவர். இந்தத் தீ விபத்தில் நான்கு இந்தியர்களும் பலியானது தொடர்பில் சில தகவல்கள் வெளிவந்துள்ளன.
சனிக்கிழமையன்று துபாயில் உள்ள தம் இஸ்லாமிய நண்பர்களுக்காக நோன்புத் துறப்பு நிகழ்விற்கு ரிஜேஷ் தம்பதியர் ஏற்பாடு செய்து வந்தனர்.
அப்போது ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் இத்தம்பதியரும் சிக்கிக்கொண்டனர். குடியிருப்பில் இருந்து வெளியேற முடியாமல் இருவரும் தீயின் கோரப்பிடியில் சிக்கி உயிரிழந்தனர்.
தமிழகத்தைச் சேர்ந்த இமாம்காசிம் அக்குடியிருப்பின் காவலராகப் பணியாற்றி வந்தார். ஹுடு சலிய குண்டு வண்ணம் பூசும் பணியைச் செய்து வந்தார்.
நான்காவது மாடியில் தீ விபத்து ஏற்பட்டதும், இருவரும் விரைந்து சென்று தீயில் சிக்கியவர்களைக் காப்பாற்ற முயன்றனர்.
இருவரது உதவியால் பலர் உயிர் பிழைத்ததாகக் கூறப்படுகிறது. எனினும் மற்றவர்களைக் காப்பாற்ற போராடிய இருவரும் விபத்துப் பகுதியில் இருந்து வெளியேற முடியாமல் போனது. இறுதியில் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இருவரது குடும்பத்துக்கும் ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப் படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.