காரைக்கால்: காரைக்கால் ஜவஹர்லால் நேரு வேளாண் கல்லூரி வளாகத்தில் கஞ்சா செடிகள் வளர்ந்திருந்ததாக எழுந்துள்ள புகார் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எனினும் இது முற்றிலும் உண்மைக்குப் புறம்பான தகவல் என கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
முன்னதாக புதுவை இந்திய ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் தலைவரும், இக்கல்லூரியின் இணைப்பேராசிரியருமான எஸ்.ஆனந்த்குமார் பெயரில் காரைக்கால், திருநள்ளாறு உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல இடங்களில் கல்லூரி நிர்வாகத்தைக் கண்டித்து சுவரொட்டிகள் ஒட்டப்பட்பட்டிருந்தன
கல்லூரி வளாகத்தில் கஞ்சா செடிகள் வளர்ந்திருந்ததாகவும் பின்னர் கல்லூரி நிர்வாகம் அவற்றை ரகசியமாக அழித்து விட்டதாகவும் அச்சுவரொட்டிகளில் குறிப்பிடப்பட்டிருந்தது.
மாணவர்கள் நலன் கருதி, சட்ட நடவடிக்கை எடுக்காமல் உண்மையை அரசுக்குத் தெரிவிக்காமல் கஞ்சா செடிகளை ரகசியமாக அழித்ததற்காக கல்லூரி முதல்வர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்," என்றும் சுவரொட்டிகளில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய கல்லூரி முதல்வர் புஷ்பராஜ், கல்லூரி மாணவர் விடுதி வளாகத்திலுள்ள குப்பைமேட்டில் வித்தியாசமான 2 செடிகள் வளர்ந்துள்ளதாக மாணவர்களில் சிலர் பேராசிரியர்களிடம் தகவல் தெரிவித்ததாகவும் உடனடியாக அச்செடிகள் அழிக்கப்பட்டுவிட்டதாகவும் குறிப்பிட்டார். எனினும் அவை கஞ்சா செடிகளா என்பது தெரியாது என்றார் அவர்.

