நங்கவள்ளி: சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் அருகே உள்ள மலையாம்பாளையத்தைச் சேர்ந்த சுந்தர ராஜ், 32, என்ற நெசவுத் தொழிலாளியின் மனைவியான நிவேதா, 27, என்பவர், தன் கள்ளக்காதலன், தோழியுடன் சேர்ந்து கணவரைக் கொன்றார்.
சந்தேகம் வராமல் இருப்பதற்காக கணவரின் உடலை அந்த மூவரும் வீட்டில் தூக்கில் தொங்கவிட்டனர். ஆனால் கடைசியில் மூன்று பேரும் அதிகாரிகளிடம் மாட்டிக்கொண்டனர்.
கணவரைக் கொலை செய்ததன் தொடர்பில் நிவேதா காவல்துறை அதிகாரிகளிடம் பல விவரங்களைத் தெரிவித்தார்.
ஜலகண்டாபுரத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக வேலை பார்த்த நிவேதாவும் அதே பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்த 27 வயது வித்யாவும் தோழியானார்கள்.
வித்யா தன்னுடைய ஆண் நண்பரான தினேஷ், 24, என்பவரை நிவேதாவுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். நிவேதாவும் தினேஷும் கைப்பேசி மூலம் மணிக்கணக்கில் பேசிப் பேசி தொடர்புகளை அதிகப்படுத்திக் கொண்டு கடைசியில் கள்ளக்காதலர்களாக மாறிவிட்டனர்.
இதை தெரிந்துகொண்ட கணவர் சுந்தர ராஜ், மனைவியைக் கண்டித்து அவரிடம் இருந்து கைப்பேசியைப் பறித்துக்கொண்டார்.
கடும் கோபமடைந்த மனைவி நிவேதா கணவரைத் தீர்த்துக் கட்ட திட்டம்போட்டு சரியான கால நேரத்தை எதிர்பார்த்து காத்திருந்தார்.
இந்நிலையில், கணவர் சுந்தர ராஜுவின் பெற்றோர் வெளியூருக்குப் புறப்பட்டுச் சென்றனர். இம்மாதம் 17ஆம் தேதியன்று கணவரைக் கொலை செய்ய நல்ல நாள் குறித்த நிவேதா, உதவிக்கு தன் கள்ளக்காதலனையும் தோழி வித்யாவையும் வரவழைத்தார்.
தொடர்புடைய செய்திகள்
மூவருமாகச் சேர்ந்து கணவர் சுந்தர ராஜுக்கு தூக்க மாத்திரை கொடுத்து தூங்க வைத்தனர். பிறகு தலையணையால் சுந்தர ராஜுவின் முகத்தை அழுத்தி கொலை செய்தனர். அவரின் உடலை தூக்கில் தொங்கவிட்டனர்.
சுந்தர ராஜுவின் பெற்றோர் திரும்பி வந்து சந்தேகப்பட்டு காவல்துறைக்குப் புகார் கொடுத்ததை அடுத்து நிவேதாவின் கொலை அம்பலமாகியது.
நிவேதா, தினேஷ், வித்யா மூவரும் இப்போது சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார்கள். விசாரணை தொடர்கிறது.
இந்நிலையில், கணவர் சுந்தர ராஜு, மனைவி நிவேதா தம்பதியின் ஒரே மகனான ஏழு வயது பையன் அனாதையாகிப் போய்விட்டானே என்று ஊர் மக்கள் பலரும் வருத்தப்படுவதாக தகவல்கள் தெரிவித்தன.


