தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ரூ.1,600 கோடியில் புது ஆலை; ஆறாயிரம் பேருக்கு வேலை

2 mins read
d3159b3c-76e8-4654-8939-b6a3ecda3703
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் ஃபாக்ஸ்கான் குழுமத் தலைவர் யங் லியு. - படம்: இந்திய ஊடகம்

சென்னை: ‘ஆப்பிள்’ கருவிகளுக்கான உதிரி பாகங்களைத் தயாரிக்கும் தைவானின் ஃபாக்ஸ்கான் நிறுவனம் தமிழகத்தின் காஞ்சிபுரத்தில் $1,600 கோடியில் புதிய ஆலையை அமைக்கவிருக்கிறது.

இதன்மூலம் கிட்டத்தட்ட 6,000 வேலைகள் உருவாக்கப்படும் என்று கூறப்பட்டது.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஃபாக்ஸ்கான் தலைவர் யங் லியூ முன்னிலையில் இந்த ஆலை தொடர்பில் கொள்கை அளவிலான உடன்பாடு கையெழுத்தானது.

ஃபாக்ஸ்கான் தொழில்நுட்பக் குழுமத்தின் ஆகப் பெரிய துணை நிறுவனமான ஃபாக்ஸ்கான் தொழிலக இணையம் (எஃப்ஐஐ) இந்த ஆலைக்கு முதலீடு செய்யும்.

கைப்பேசிகளுக்கான மின்னணுப் பாகங்களைத் தயாரிக்கும் அதிநவீன ஆலையை எஃப்ஐஐ அமைக்கும் எனத் தகவல்கள் கூறுகின்றன.

ஏற்கெனவே ஸ்ரீபெரும்புதூரில் உதிரி பாகங்களை ஒருங்கிணைத்து ஐபோன்களை உருவாக்கும் ஃபாக்ஸ்கான் ஆலை செயல்பட்டு வருகிறது. அங்கிருந்து உள்ளூர்ச் சந்தைகளுக்கும் அனைத்துலக நாடுகளுக்கும் ஐபோன்கள் அனுப்பப்படுகின்றன.

இந்நிலையில், காஞ்சிபுரத்தில் தொடங்கப்படவுள்ள புதிய ஆலை, ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஆலையுடன் இணைந்து செயல்படாமல் தன்னிச்சையாக இயங்கும் என்று இந்திய ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

“ஃபாக்ஸ்கான் நிறுவனம் தமிழகத்தில் மீண்டும் மீண்டும் முதலீடு செய்வது, இந்தியாவில் தொழில் தொடங்க தமிழகம் உகந்த மாநிலமாக விளங்குகிறது என்பதற்குச் சான்று பகர்வதாக உள்ளது. இது மிகப் பெரிய சாதனை,” என்று தமிழகத் தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா கூறினார்.

முன்னதாக, ஆப்பிள் நிறுவனத்தின் முக்கிய ஒப்பந்ததாரரான பெகாற்றான் நிறுவனம், சென்னைக்கு அருகே தனது இரண்டாவது தயாரிப்பு ஆலையை அமைக்கவிருப்பதாகக் கோடிகாட்டியிருந்தது.

மின்னணுப் பொருள்கள் ஏற்றுமதியில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. கடந்த 2023ஆம் நிதியாண்டில் தமிழகத்தில் இருந்து $5.37 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள மின்னணுப் பொருள்கள் ஏற்றுமதி செய்யபப்ட்டன.

கடந்த 2022ஆம் நிதியாண்டில் மின்னணுப் பொருள்கள் ஏற்றுமதியில் தமிழகம் நான்காம் நிலையிலிருந்தது.

நோக்கியா, சாம்சுங், டெல், மோட்டரோலா, எச்பி உள்ளிட்ட உலகின் 16 முன்னணி மின்னணுப்பொருள் தயாரிப்பு நிறுவனங்களின் ஆலைகள் தமிழகத்தில் அமைந்துள்ளன.

மின்னணு மற்றும் கணினி வன்பொருள் தயாரிப்பிற்காக ஸ்ரீபெரும்புதூரிலும் ஒரகடத்திலும் இரு சிறப்புப் பொருளியல் மண்டலங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

குறிப்புச் சொற்கள்