பாரதிய ஜனதா கட்சியிலிருந்து விலகிய நடிகை கவுதமி, “கனத்த இதயத்துடனும், கடும் அதிருப்தியுடனும்” இந்த முடிவை எடுத்திருப்பதாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.
என்னுடைய 17 வயதிலிருந்து நான் வேலை செய்து கொண்டிருக்கிறேன். நானும் என் மகளும் பாதுகாப்பான சூழலில் இருக்க வேண்டிய ஒரு கட்டத்தில் இருக்கிறோம். ஆனால் பாஜக நிர்வாகியான சி.அழகப்பன் என்னுடைய பணம், சொத்து, ஆவணங்களை ஏமாற்றிவிட்டார். மேலும் அழகப்பன் சட்டத்திலிருந்து தப்பிக்கவும், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு 40 நாட்களாக அவர் தலைமறைவாக இருப்பதற்கும் சில மூத்த பாஜக உறுப்பினர்கள் உதவி செய்திருப்பதை அறிந்து நொறுங்கிப் போனேன். 25 ஆண்டுகாலம் கட்சிக்குத் தொடர்ந்து விசுவாசமாக இருந்தபோதும், எனக்கு முற்றிலுமாக ஆதரவு இல்லை. எனவே, கனத்த இதயத்துடனும், கடும் அதிருப்தியுடனும் பாஜகவில் இருந்து விலக முடிவு செய்திருக்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், கவுதமி குற்றம்சாட்டிய சி.அழகப்பன் பாஜகவின் எந்த பொறுப்பிலும் இல்லை என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். அத்துடன், இந்த விவகாரத்தில் கட்சி அளவிலும் தனிப்பட்ட முறையிலும் கவுதமியுடன் நிற்பதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்.கவுதமி கட்சியில் தொடர்ந்தாலும் இல்லாவிட்டாலும் அவருக்கு பாஜக நிச்சயம் உதவும் என்றும் அவர் கூறியுள்ளார்.
கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக பாஜகவில் பணியாற்றிய நடிகை கவுதமி கட்சியில் இருந்து விலகுவதாக திங்கட்கிழமை அறிவித்தார்.