பிரதமர் மோடி: தமிழ்நாட்டின் வளர்ச்சியில் உறுதியாக உள்ளேன்

பிரதமர் மோடி: தமிழ்நாட்டின் வளர்ச்சியில் உறுதியாக உள்ளேன்

படம்: இந்திய ஊடகம்

05 Mar 2024 - 7:57 pm

2 mins read

சென்னை: தமிழகத்துக்கு இந்த ஆண்டில் நான்காவது முறையாக வருகை மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கத்தில் புதிய மின் திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் திங்கள்கிழமை மாலை நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுப் பேசினார். அப்போது தமிழக திமுக அரசைக் கடுமையாக விமர்சித்தார். தமிழகத்தில் போதைப்பொருள்களைக் கட்டுப்பாடில்லாமல் விற்பனை செய்ய ஆளுங்கட்சி அனுமதிப்பதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டினார்.

“போதைப்பொருள் கலாசாரத்தைத் தடுக்க மத்திய அரசு நிச்சயமாக நடவடிக்கை எடுக்கும்,” என்று உறுதியளித்தார் பிரதமர் மோடி.

இண்டியா கூட்டணியும் குடும்ப அரசியலும்

இண்டியா கூட்டணி பற்றி பேசிய பிரதமர் மோடி, “பாஜகவுக்கு எதிராக அமைக்கப்பட்டுள்ள இண்டியா கூட்டணி ஒரு ஊழல் கூட்டணி. கூட்டணிக் கட்சிகளான திமுகவும் காங்கிரசும் குடும்பத்திற்கு முன்னுரிமை அளிக்கின்றன. இதுபோன்ற குடும்ப அரசியல் செய்பவர்கள் ஆட்சிக்கு வந்தால் மக்கள் அடிமைகளாகத்தான் இருப்பார்கள். தேசத்திற்கே முன்னுரிமை அளிக்க வேண்டும்,” என்று நான் கூறியதால் என்னை விமர்சித்து வருகின்றனர்.

மத்திய அரசின் ரூ.1,000 கோடி திட்டங்கள்

தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, தமிழ்நாட்டின் எதிர்காலத்துக்காக மத்திய அரசு பணியாற்றும் சூழலில், மத்திய அரசின் திட்டங்களுக்கு திமுக அரசு இடையூறாக உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

“தமிழ்நாட்டின் வளர்ச்சியில் உறுதியாக உள்ளேன். நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் சென்னையின் பங்கு முக்கியமானது. சென்னையில் ரூ.1,000 கோடிக்கான நகர்ப்புற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. சென்னை மெட்ரோ, விமான நிலையத் திட்டங்களுக்கு மத்திய அரசு உதவுகிறது,” என்றார்.

ஸ்டாலின்: தமிழகத்தைச் சுரண்டுகிறது பாஜக

இதனிடையே, எக்ஸ் சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ள முதல்வர் மு.க. ஸ்டாலின், “தேர்தல் நேரத்தில் மட்டும் வருபவர்கள் அல்ல நாங்கள். எப்போதும் எந்தச் சூழலிலும் தமிழ்நாட்டு மக்களோடு அவர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுப்பவர்கள், ஒன்றி நிற்பவர்கள். நாம் என்றும் மக்கள் பக்கம்! மக்கள் என்றும் நம் பக்கம்,” என திமுக தலைவரும் முதல்வருமான மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்தை அரசியல் ஆதாயத்திற்காக சுரண்டுவதாக விமர்சித்த மு.க.ஸ்டாலின், வெள்ளத்திற்குப் பிறகு பேரிடர் நிவாரண உதவிக்கு நிதி வழங்கவில்லை என குற்றம்சாட்டியுள்ளார்.

வாக்குச் சேகரிப்பதற்காகவே பிரதமர் மோடி தமிழகத்திற்கு வருகை தந்துள்ளதாக தெரிவித்த மு.க.ஸ்டாலின், அவரது அரசியல் பேச்சுகளுக்கு எல்லாம் தமிழக மக்கள் சளைக்க மாட்டார்கள், மாறாக அவர்களது நலனில் அர்ப்பணிப்புடன் செயல்படும் திமுக அரசை தொடர்ந்து ஆதரிப்பார்கள் என ஸ்டாலின் கூறியுள்ளார்.

பாஜகவுக்கு வைப்புத்தொகைகூட கிடைக்காது

இதனிடையே, சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் சேகர்பாபு பேசியபோது, பிரதமர் மோடியின் தமிழக வருகை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. திமுகவைப் பார்க்கும்போதே பாஜகவின் வயிற்றில் புளியைக் கரைக்கிறது. சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்கள் பெருவெள்ளத்தில் பாதிக்கப்பட்டபோது வராத பிரதமர் மோடி, தனது அரசியல் லாபத்திற்காக தமிழ்நாட்டுக்கு அடிக்கடி வருகிறார். எத்தனை முறை பிரதமர் மோடி தமிழகம் வந்தாலும் பா.ஜ.க. வைப்புத்தொகையைக் கூட பெறமுடியாது. பிரதமர் மோடி தண்ணீரில் வடை சுடுகிறார் என்றார்.

குறிப்புச் சொற்கள்