நாமக்கல் பகுதியில் காதல் விவகாரத்தை கண்டித்ததால் குடும்பத்தையே கொலை செய்ய துணிந்த கல்லூரி மாணவரைக் காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர்.
நாமக்கல் பேருந்து நிலையத்திற்கு எதிரே உள்ள உணவகம் ஒன்றில் கடந்த 30ஆம் தேதி, கொசவம்பட்டியைச் சேர்ந்த தனியார் பொறியியல் கல்லூரி மாணவர் பகவதி, 20, ஏழு கோழிச் சோற்றுப் பொட்டலங்களை வாங்கி, வீட்டில் உள்ள தனது தாயாரிடம் கொடுத்துவிட்டு, தேவராயபுரத்தில் வசித்துவரும் தாத்தாவின் வீட்டிற்குச் சென்று தாத்தா சண்முகநாதனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் அவற்றைக் கொடுத்துள்ளார்.
அந்தக் கோழிச் சோற்றைச் சாப்பிட்ட மாணவரின் தாயாருக்கும், தாத்தாவுக்கும் மட்டும் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் மீதமுள்ளவர்கள் கோழிச் சோற்றைச் சாப்பிடவில்லை.
அதனைத் தொடர்ந்து, உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த கல்லூரி மாணவரின் தாயாரும் தாத்தாவும் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு, செயற்கை சுவாச உதவியுடன் சிகிச்சை பெற்று வந்தனர்.
உணகவகத்தில் கடந்த 30ஆம் தேதி ஏறக்குறைய 100 பேர் சாப்பிட்டனர். இருப்பினும், அவர்களில் 2 பேருக்கு மட்டும் உடல்நலம் பாதிக்கப்பட்டதால், உணவுப் பாதுகாப்புத் துறையினருக்குச் சந்தேகம் எழுந்தது. உணவில் எவ்விதக் குறைபாடும் இருக்க வாய்ப்பு இல்லை எனத் தெரியவந்தது.
இந்நிலையில், உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த மாணவரின் தாத்தா சண்முகநாதன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
உணவு மாதிரியின் பகுப்பாய்வு முடிவில், உணவில் நஞ்சு கலந்து இருந்ததும் உறுதியானது.
அதனைத் தொடர்ந்து, காவல்துறையின் பார்வை கல்லூரி மாணவர் பகவதி பக்கம் திரும்பியது.
தொடர்புடைய செய்திகள்
அவரை விசாரித்ததில், அவரது காதல் விவகாரத்தை தாயாரும் குடும்பத்தினரும் கண்டித்தது தெரியவந்தது. இதனால், அவர் உணவில் நஞ்சு கலந்து அவர்களைக் கொலை செய்ய திட்டமிட்டதாகத் தெரியவந்தது.
பகவதியைக் கைது செய்த நாமக்கல் காவல்துறையினர், இந்த வழக்கைக் கொலை வழக்காக மாற்றி தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.