சென்னை: உணவு விநியோக ஊழியர்களுக்கு மின்சார இருசக்கர வாகனம் வாங்க ரூ.20 ஆயிரம் மானியம் வழங்கப்படும் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது. இதில் ஊழியர்களுக்கான விபத்துக் காப்பீடும் அடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் உணவு விநியோக ஊழியர்களாகப் பணியாற்றுவோர் எண்ணிக்கை அதகரித்து வருகிறது. இதையடுத்து, அவர்களுக்குப் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்த இருப்பதாக கடந்த சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின்போது அரசு தெரிவித்தது.
முதற்கட்டமாக, அந்த ஊழியர்கள் ஓய்வெடுக்க சாலையோரங்களில் குளிர்சாதன வசதியுடன் கூடிய ஓய்வறைகள் அமைக்கப்பட்டன. அடுத்து, காப்பீட்டுத் திட்டமும் அறிவிக்கப்பட்டது. இனி உணவு விநியோகிக்கும் ஊழியர் ஒருவர் மரணமடைந்தால், ஐந்து லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும்.
மேலும், கை, கால், ஒரு கண்ணில் பாதிப்பு ஏற்பட்டால் ரூ.2.5 லட்சம் இழப்பீடாக வழங்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்ததுடன், உடனுக்குடன் அரசாணை ஒன்றையும் வெளியிட்டது.
தற்போது உணவு விநியோகிக்கும் ஊழியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், 2,000 ஊழியர்கள் மின்சார இருசக்கர வாகனம் வாங்க மானியம் வழங்கும் திட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக, 4 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசின் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பல ஊழியர்கள் தற்போது வாகன வசதி இல்லாததால், சைக்கிளில் சென்று உணவு விநியோகிக்கின்றனர். மேலும், பெட்ரோல் விலை உயர்வு காரணமாகவும் பல ஊழியர்கள் சிரமத்துக்கு ஆளாகின்றனர்.
இந்நிலையில், இப்பிரச்சினைகளுக்குத் தீர்வாக தமிழக அரசின் அறிவிப்பு அமைந்துள்ளது.