மீனம்பாக்கம் விமான நிலையத்தை விரிவாக்க தமிழக அரசு பரிசீலனை

மீனம்பாக்கம் விமான நிலையத்தை விரிவாக்க தமிழக அரசு பரிசீலனை

2 mins read
8856b9f9-a034-42da-ac7a-5c1f7d5b171f
பயணிகள் எளிதில் வந்துசெல்லும் வகையில் பொழிச்சலூர், தாராப்பாக்கம் பகுதிகள் வழியே புதிய அணுகுசாலைகள், புறவழிச் சாலைகளை இணைக்கும் திட்டங்களும் பரிசீலனையில் உள்ளன. - படம்: பிஸ்னஸ் லைன்
Google News Preferred Icon

சென்னை: காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமையவிருந்த இரண்டாவது பசுமைவெளி விமான நிலையத்துக்கான திட்டம் கைவிடப்பட்டதை அடுத்து, சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தை மேலும் விரிவாக்கம் செய்ய தமிழக அரசு தீவிர பரிசீலனை செய்து வருகிறது.

பரந்தூர் பகுதியில் விவசாய நிலங்கள், நீர்நிலைகள் பாதிக்கப்படும் எனக் கூறி அப்பகுதி மக்களும் விவசாயிகளும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், மக்களின் கோரிக்கையை ஏற்றும் சுற்றுச்சூழல் நலனைக் கருத்தில் கொண்டும் இத்திட்டம் கைவிடப்படுவதாக சட்டமன்றத்தில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக, சென்னையின் எதிர்கால வான்வழிப் போக்குவரத்துத் தேவையைச் சமாளிக்க மீனம்பாக்கம் விமான நிலையத்திலேயே கூடுதல் உள்கட்டமைப்புகளை உருவாக்க அரசு முடிவு செய்துள்ளது.

புதிதாக ஐந்தாவது முனையத்தை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஓடுபாதைகளின் திறன் அதிகரிப்பு, சரக்குக் கையாளும் வசதிகளை மேம்படுத்தும் பணிகளுக்கும் முன்னுரிமை அளிக்கப்படவுள்ளது.

விமான நிலைய விரிவாக்கத்தின் காரணமாகச் சுற்றியுள்ள குடியிருப்புப் பகுதிகளுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் திட்டங்கள் வடிவமைக்கப்படும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயணிகள் எளிதில் வந்துசெல்லும் வகையில் பொழிச்சலூர், தாராப்பாக்கம் பகுதிகள் வழியே புதிய அணுகுசாலைகள், புறவழிச் சாலைகளை இணைக்கும் திட்டங்களும் பரிசீலனையில் உள்ளன.

ஏற்கெனவே கையகப்படுத்தப்பட்ட பரந்தூர் நிலங்களைத் தொழில்துறை பயன்பாடுகளுக்குப் பயன்படுத்தவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. மீனம்பாக்கம் விமான நிலையத்தின் இந்த விரிவாக்க நடவடிக்கை, வணிகம், வேலைவாய்ப்பு வளர்ச்சியைப் பாதுகாக்கும் அதேவேளையில், பொதுமக்களின் எதிர்ப்பின்றி உள்கட்டமைப்பை மேம்படுத்த உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த சில மாதங்களில் விரிவாக்கப் பணிகள் தொடங்கும் என எதிர்பார்ப்பதாக சென்னை விமான நிலைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

குறிப்புச் சொற்கள்
சென்னை விமான நிலையம்முனையம்பரந்தூர்விரிவாக்கம்மாநில அரசு