சென்னை: பெண்களின் பொருளியல் தற்சார்பை உறுதிசெய்து, அவர்களைத் தன்னம்பிக்கை மிக்க தொழில் முனைவோராக உயர்த்தும் நோக்கில், தமிழ்நாடு கூட்டுறவுத்துறை சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் ‘சிங்கப்பெண் கடன்’ திட்டத்தின்கீழ் சுயதொழில் தொடங்க விண்ணப்பிக்கலாம் எனக் கூட்டுறவுத்துறை அமைச்சர் வ. காந்திராஜ் அறிவித்துள்ளார்.
குடும்பத்தின் ஆணிவேராகத் திகழும் மகளிரின் கனவுகளுக்குச் சிறகளிப்பதுடன், கந்துவட்டிப் பிடியிலிருந்து மக்களை மீட்டு அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் எனத் தமிழக அரசு கூறியுள்ளது.
இதன்மூலம் மகளிர் சுயஉதவிக் குழு உறுப்பினர்கள், கைம்பெண்கள், கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், புதிய தொழில் முனைவோர்கள், பணிபுரியும் மகளிர் ஆகியோர் கடனுதவி பெற்றுப் பயனடைய முடியும்.
நடப்பாண்டில் நவம்பர் 2026 வரையிலான காலகட்டத்தில் மட்டும் 41,369 பயனாளிகளுக்கு ரூ.3,428.49 கோடி அளவில் கடன்கள் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய சுயதொழில் தொடங்க விரும்பும் பெண்களும் ஏற்கெனவே செய்துவரும் தொழிலை விரிவுபடுத்த விரும்பும் பெண்களும் தங்களுக்கு அருகிலுள்ள மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் அல்லது தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்களை நேரில் அணுகி கடனுதவி பெறலாம் என அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.
பெண்களின் சுயசார்பு வாழ்வை வலுப்படுத்தும் இந்தத் திட்டத்தைத் தகுதியுள்ள அனைவரும் முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதே அரசின் நோக்கம் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.
