தமிழ்நாட்டின் பொருளியல் 16% வளர்ச்சி: இந்தியாவிலேயே வேகமான மாநிலம்

2 mins read
dc06fc18-c61b-44fd-8b18-e2f149e9caf7
தமிழ்நாடு கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து அதிக வளர்ச்சியைப் பதிவு செய்து வருகிறது. - படம்: ஐஏஎன்எஸ்

சென்னை: இந்தியாவின் பெரிய மாநிலங்களில் தமிழ்நாடு வேகமான வளர்ச்சியைப் பதிவு செய்திருப்பதாக இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) வெளியிட்டுள்ள புள்ளிவிவர அறிக்கை தெரிவித்து உள்ளது.

2024-25 நிதி ஆண்டுக்கான பொருளியல் நிலவரங்களை உள்ளடக்கிய கையேடு ஒன்றை ஆர்பிஐ வெளியிட்டுள்ளது.

அதில், தமிழ்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) ரூ.26.89 லட்சம் கோடியிலிருந்து ரூ.31.18 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. இது 16 விழுக்காடு வளர்ச்சி.

இந்தியாவின் வேறு எந்த பெரிய மாநிலமும் இந்த அளவுக்கு வளர்ச்சி பெறவில்லை என கையேடு குறிப்பிட்டுள்ளது.

மொத்த உள்நாட்டு உற்பத்திதான் அந்த மாநிலத்தின் பொருளியல் என்று அழைக்கப்படுகிறது.

பொருளியல் அளவின் அடிப்படையில் கணக்கிடும்போது முதல் மாநிலமாக மகாரா‌ஷ்டிராவும் இரண்டாவது மாநிலமாக தமிழ்நாடும் உள்ளன.

இருப்பினும், 2024-25 நிதி ஆண்டில் தமிழ்நாடு பெற்ற வளர்ச்சியை மகாரா‌ஷ்டிரா பெறவில்லை.

அதேநேரம், அந்த நிதி ஆண்டில் பணவீக்கத்தை விலக்கிவிட்டு கணக்கிடுகையில், மதிப்பு அடிப்படையிலான வளர்ச்சியில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது.

பொருளியல் வளர்ச்சியின் அடிப்படையில் ஆர்பிஐ வெளியிட்டுள்ள பட்டியலில் முதல் ஐந்து இடங்களைப் பெற்றுள்ள மாநிலங்கள்: மகாரா‌ஷ்டிரா (₹45.31 லட்சம் கோடி), தமிழ்நாடு (₹31.18 லட்சம் கோடி), உத்தரப் பிரதேசம் (₹29.78 lலட்சம் கோடி), கர்நாடகா (₹28.83 லட்சம் கோடி), குஜராத் (₹26.72 லட்சம் கோடி).

தமிழ்நாடு தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக அதிக வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. 2021-22 நிதி ஆண்டுக்கும் 2024-25 நிதி ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் கிட்டத்தட்ட ஜிடிபி ₹10.5 லட்சம் கோடி அதிகரித்துள்ளது. அதாவது, ₹20.72 லட்சம் கோடியிலிருந்து ₹31.18 லட்சம் கோடிக்கு அது வளர்ந்துள்ளது.

2024-25 நிதி ஆண்டின் முதல் ஐந்து இடங்களில் பிரதமர் மோடியின் குஜராத் மாநிலம் ஐந்தாவது இடத்தைப் பிடித்திருப்பதும் தென்னிந்தியாவின் பெரிய மாநிலங்களில் ஒன்றான ஆந்திரப் பிரதேசம் முதல் ஐந்து இடங்களில் இடம்பெறாததும் குறிப்பிடத்தக்கவை.

பரப்பளவிலும் மக்கள்தொகையிலும் பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசத்தைக் காட்டிலும் ₹1.4 லட்சம் கோடி அதிக பொருளியலைக் கொண்ட மாநிலமாக தமிழ்நாடு உருவெடுத்துள்ளதும் ஒரு முக்கியத் தகவல்.

ஸ்டாலின் உறுதி

தமிழ்நாட்டின் வளர்ச்சி குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் தமது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “பரப்பளவில் பெரிய மாநிலம் இல்லை; மக்கள்தொகையிலும் பெரிய மாநிலம் இல்லை; மத்திய அரசின் ஆதரவு பெருமளவில் இல்லை! இருந்தும் பொருளியல் வளர்ச்சியில் 16% பெற்று தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது என்றால், அதுதான் திராவிட மாடல். இந்தியாவில் தமிழ்நாடு முதலிடத்தில் இல்லாத துறையே இல்லை என்ற நிலையை உருவாக்கிக் காட்டுவேன்! இது உறுதி,” என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்