தஞ்சை: தஞ்சாவூரில் தொடக்கப் பள்ளி ஆசிரியை படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தஞ்சாவூர் மாரியம்மன் கோயில் அருகே உள்ள மேல களக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் காவியா, 26.
இவர் ஆலங்குடி அரசு தொடக்கப் பள்ளியில் தற்காலிக ஆசிரியராக பணிபுரிந்து வந்தார்.
அதே ஊரைச் சேர்ந்த அஜித்குமார், 29, என்பவர் பெயிண்டர் வேலை செய்து வந்தார்.
காவியாவும் அஜித்குமாரும் நீண்டகாலமாகக் காதலித்து வந்ததாகச் சொல்லப்படுகிறது. அது காவியாவின் பெற்றோருக்குப் பிடிக்கவில்லை.
“நீ ஆசிரியை; அவன் பெயிண்டர்; இது ஒத்துவராது,” என அந்தப் பெற்றோர் காவியாவிடம் கூறியதாகத் தெரிகிறது.
இந்நிலையில், காவியாவின் தந்தை புண்ணியமூர்த்தி தன் மகளை வற்புறுத்தி, உறவினருக்கு மணமுடிக்க ஏற்பாடு செய்தார். இதையடுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.
புதன்கிழமை (நவம்பர் 26) இரவு சுமார் 8 மணியளவில் கைப்பேசியில் பேசிக் கொண்டிருந்தபோது, தனக்கு நிச்சயதார்த்தம் நடந்ததை அஜித்குமாரிடம் காவியா கூறினார். மேலும், நிச்சயதார்த்த புகைப்படங்களையும் அஜித்குமாருக்கு அவர் அனுப்பினார்.
தொடர்புடைய செய்திகள்
அப்போதே இருவருக்கும் இடையே வாக்குவாதம் நடந்ததாகச் சொல்லப்படுகிறது.
இந்நிலையில், வியாழக்கிழமை (நவம்பர் 27) காலை தனது மோட்டார் சைக்கிளில் பள்ளிக்கு கிளம்பிச் சென்றார் காவியா.
அப்போது வழிமறித்த அஜித்குமார், காவ்யாவை சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினார்.
இந்தப் படுகொலை சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற காவல்துறையினர், காவியாவின் உடலைக் கைப்பற்றி தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தப்பி ஓடிய அஜித் குமார் சரணடைந்தார். அவரைக் கைது செய்த காவல்துறையினர், அம்மாப்பேட்டை காவல் நிலையத்தில் வைத்து விசாரித்து வருகிறார்கள்.

