கோவில் பூசாரி உயிரிழப்பு விவகாரம்: ஓ.பி.எஸ். தம்பி மீதான வழக்கில் தீர்ப்பு

2 mins read
ce060508-b8d1-4e7f-83bf-8765e3872339
ஓ.ராஜா, ஓ.பன்னீர்செல்வம். - படங்கள்: தமிழக ஊடகம்

திண்டுக்கல்: தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள டி.கள்ளிப்பட்டியைச் சேர்ந்த சுப்புராஜ் மகன் நாகமுத்து (வயது 22). இவர் கைலாசப்பட்டியில் உள்ள கைலாசநாதர் கோவில் பூசாரியாக இருந்து வந்தார்.

கோவிலில் கடை ஒதுக்குவது தொடர்பாக இவருக்கும், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் தம்பியுமான ஓ.ராஜாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகக் கூறப்பட்டது.

இந்நிலையில், கடந்த 2012ஆம் ஆண்டு டிசம்பர் 7ஆம் தேதி நாகமுத்து தனது உயிரை மாய்த்துக்கொண்டார். இவரை உயிரை மாய்த்துக்கொள்ளத் தூண்டி விட்டதாக கோவில் அறங்காவலராகவும் பெரியகுளம் முன்னாள் நகரமன்றத் தலைவராகவும் இருந்த ஓ.ராஜா, தென்கரை பேரூராட்சி முன்னாள் தலைவர் பாண்டி உட்பட 7 பேர் மீது பெரியகுளம் தென்கரை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.

மதுரை உயர் நீதிமன்றக் கிளையின் உத்தரவுப்படி, கடந்த 2015ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் இந்த வழக்கு திண்டுக்கல் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. வழக்கு விசாரணை நடைபெற்றபோதே பாண்டி என்பவர் இறந்துவிட்டார். மற்ற ஆறு பேர் மீதான வழக்கு விசாரணை தற்போது திண்டுக்கல் மாவட்ட பட்டியல் வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஓ.ராஜா, மணிமாறன், சிவக்குமார், ஞானம், லோகு, சரவணன் ஆகியோர் நிபந்தனையற்ற பிணை பெற்று இருப்பதால் வழக்கு விசாரணையின்போது நீதிமன்றத்தில் முன்னிலையாகி வருகின்றனர்.

இந்த வழக்கில் 23 சாட்சியங்கள் விசாரணை செய்யப்பட்டுள்ளன. நான்கு தடயங்கள், சாட்சியங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. அரசுத் தரப்பின் இறுதிக் கட்ட வாதத்துக்காக ஒத்திவைக்கப்பட்டு இருந்த இந்த வழக்கு விசாரணையின்போது மூவர் மட்டும் நீதிபதி முரளிதரன் முன்பு முன்னிலையாகினர்.

அப்போது ஓ.ராஜா உட்பட மூவர் முன்னிலையாகாத நிலையில் இறுதிக் கட்ட விசாரணை முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து இந்த வழக்கின் தீர்ப்பை புதன்கிழமை (நவம்பர் 13) வழங்குவதாக நீதிபதி உத்தரவிட்டார். எனவே, நவம்பர் 13ஆம் தேதி குற்றம் சாட்டப்பட்ட ஓ.ராஜா உட்பட அனைவரும் நேரில் முன்னிலையாக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்