என்னுடன் இருப்பவர்களுக்குத்தான் தேர்தலில் இடம்: ராமதாஸ்

1 mins read
150cbe4a-a22e-4cec-9cd7-5a0b53603cad
பாமக நிறுவனர் ராமதாஸ். - கோப்புப்படம்: இந்து

விழுப்புரம்:  தன்னுடன் இருக்கும் நிர்வாகிகள் மட்டுமே சட்டமன்ற உறுப்பினர் பதவிக்கான போட்டியில் களமிறக்கப்படுவர் என்றும் தனக்கே அதிகாரம் உள்ளது என்றும் பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தைலாபுரத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் திரு ராமதாஸ் பேசினார்.

“இங்கே வந்து இருக்கும் பொறுப்பாளர்கள், மாவட்டச் செயலாளர்கள்தான் தேர்தலில் போட்டியிடப் போகிறார்கள். இவர்களைத்தான் நான் தேர்ந்தெடுப்பேன். இவர்கள்தான் வருங்கால சட்டமன்ற உறுப்பினர்கள். காரணம், எனக்கு எல்லா அதிகாரமும் உண்டு.

“அதனால்தான் நான் இந்தக் கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்று நல்லவர்களை, வல்லவர்களை சட்டமன்ற உறுப்பினர்களாக ஆக்குவேன் என்று இந்த நேரத்தில் உங்கள் மூலம் சொல்ல விரும்புகிறேன். என்னைச் சந்தித்துக் கட்சியில் பொறுப்பைப் பெற்றுக்கொண்ட நிர்வாகிகளே தேர்தலில் போட்டியிடுவார்கள்.

“தேர்தலில் யாருடன் கூட்டணி வைக்கப்படும் என்பதைப் பற்றி பேச்சுவார்த்தை நடத்தவில்லை. சட்டமன்றத் தேர்தலில் நல்ல கூட்டணி, வித்தியாசமான கூட்டணி, வெற்றிபெறும் கூட்டணி அமைக்கப்படும். முருக பக்தர்கள் மாநாட்டில் ஈ.வெ.ரா. (பெரியார்), அண்ணாதுரையை இழிவுபடுத்தியது தவறு. யாரையும் இழிவுபடுத்தக்கூடாது,” என்று திரு ராமதாஸ் விவரித்தார்.

குறிப்புச் சொற்கள்