சென்னை: வங்கக்கடலில் இலங்கை அருகே உருவாகியுள்ள ‘டித்வா’ புயல், தற்போது வடக்கு, வடமேற்குத் திசையில் நகர்வதாக சென்னை வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.
சனிக்கிழமை (நவம்பர் 29) சென்னையை நெருங்கி வரும் என வானிலை ஆய்வு நிலையத்தின் தென் மண்டலத் தலைவர் பி.அமுதா கூறியுள்ளார்.
சென்னையை நெருங்கினாலும் அந்தப் புயல் அங்கு கரையைக் கடக்க வாய்ப்பு இல்லை என்றும் ‘டித்வா’ புயல் ஆந்திராவை நோக்கிச் செல்ல அதிக வாய்ப்பு உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
புயல் கரையைக் கடக்காதபோது, ஆந்திராவின் கடலோர மாவட்டங்களில் 20 சென்டி மீட்டருக்கு மேல் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதையடுத்து, தமிழகத்தில் சில மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் இரு நாள்களுக்கு பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே, ‘டித்வா’ என்றால் ‘நீர்ப்பரப்பு’ எனப் பொருள்படும் என்றும் ஏமன் நாட்டின் பரிந்துரையின் பேரில், இந்தப் பெயர் சூட்டப்பட்டது என்றும் வானிலை ஆய்வு நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வியாழக்கிழமை அன்று, ‘டித்வா’ புயல் சென்னையில் இருந்து சுமார் 700 கிலோ மீட்டர் தொலைவில் நிலைகொண்டிருந்தது. அப்போது, மணிக்கு 15 கிலோ மீட்டர் வேகத்தில் சென்னையை நோக்கி நகரத் தொடங்கிய புயல், வெள்ளிக்கிழமை பிற்பகலில் வேகம் இழந்தது.
புயல் சென்னையை நெருங்கும்போது ஏற்படக்கூடிய விளைவுகள் குறித்து, அதன் அடுத்தடுத்த நகர்வுகளைப் பொறுத்து கணிக்க முடியும் என்றார் பி.அமுதா.
தொடர்புடைய செய்திகள்
எனினும், தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பெரும்பாலான இடங்கள், வட மாவட்டங்களில் பல இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்றும் பலத்த தரைக்காற்று வீச வாய்ப்புள்ளது என்றும் அவர் கூறினார்.
துாத்துக்குடி, விருதுநகர், மதுரை, பெரம்பலுார், கடலுார் மாவட்டங்கள், புதுவையில் வெள்ளிக்கிழமை (நவம்பர் 28) கனமழை பெய்தது.
தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளில், அடுத்த ஐந்து நாட்களுக்கு பலத்த சூறாவளி வீசும் என்பதால், மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டது.

