சென்னை: மதில் சுவர் பிரச்சினையில் அண்டை வீட்டாருடன் தாம் சமரசம் செய்துகொண்டதாக நடிகை திரிஷா தகவல் தெரிவித்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 24) அவ்வழக்கு முடித்து வைக்கப்பட்டது.
வழக்கை முடித்து வைத்த நீதிபதி, திரிஷா, 41, செலுத்திய நீதிமன்றக் கட்டணத்தைத் திருப்பியளிக்க பதிவுத்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.
சென்னை செனடாப் ரோடு இரண்டாவது வீதியில் தமது வீட்டின் கட்டமைப்பைப் பாதிக்கும் வகையில், பொதுவான மதில் சுவரை இடித்துக் கட்டுமானம் மேற்கொள்ள அண்டை வீட்டார் மெய்யப்பனுக்கு நிரந்தரத் தடை விதிக்கக் கோரி, இவ்வாண்டு ஜனவரியில் சென்னை உயர்நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கை திரிஷா தாக்கல் செய்திருந்தார்.
வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், பொதுவான மதில் சுவரை இடிக்க இடைக்காலத் தடைவிதித்து உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதி டீக்காரமன் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
இருதரப்பிலும் இந்தப் பிரச்சினை குறித்து சமரசமாக பேசி தீர்க்கப்பட்டு விட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.