வனத்துறையினருக்கு கண்ணாமூச்சி ஆட்டம் காட்டி கஞ்சா செடி வளர்த்த இருவர் கைது

1 mins read
d806fcb4-9d77-4d8f-a443-ad7500255956
கல்வராயன் மலைப் பகுதி, சமூக விரோதிகளின் கூடாரமாக விளங்கி வருகிறது. - படம்: தமிழக ஊடகம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கள்ளச்சாராயம் குடித்து 60க்கும் மேற்பட்டோர் பலியான சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அப்போது, காவல்துறையினர், மது விலக்குப் பிரிவினர் கல்வராயன் மலைப் பகுதியில் அதிரடிச் சோதனை நடத்தி கள்ளச்சாராயம் காய்ச்சுவோரைக் கைது செய்தனர்.

கல்வராயன் மலைப் பகுதி, சமூக விரோதிகளின் கூடாரமாக விளங்கி வருகிறது. விவசாயப் பயிர்களுக்கு மத்தியில் கஞ்சா விளைவிப்பது என அப்பகுதியில் சட்ட விரோதச் செயல்கள் ஏராளமாக நடைபெற்று வருவது வெளிச்சத்துக்கு வந்தது.

இந்நிலையில் கல்வராயன் மலை அருகே வனத்துறைக்குச் சொந்தமான இடத்தில் ஏறத்தாழ 1,600 கஞ்சா செடிகள் வளர்க்கப்படுவதாகத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து வனத்துறை அதிகாரிகள் குறிப்பிட்ட இடத்திற்குச் சென்று ஆய்வு செய்தனர்.

1,600 கஞ்சா செடிகளை வளர்த்ததாக இருவரை வனத்துறையினர் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அங்கிருந்து 104 கிலோ கஞ்சா செடிகளையும் வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இடத்தில் கஞ்சா செடிகளை வளர்த்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்புச் சொற்கள்