புதுடெல்லி: நாடு முழுவதும் மாண்டுபோன இரண்டு கோடிப் பேரின் ஆதார் அட்டைகள் செயலிழக்கச் செய்யப்பட்டன. இதற்கான நடவடிக்கைகளை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) மேற்கொண்டது.
இந்திய மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் பதிவாளர் ஜெனரலிடம் இருந்து இதற்கான தரவுகள் பெறப்பட்டன.
எந்தவோர் ஆதார் எண்ணும் ஒருபோதும் மற்றொரு நபருக்கு மீண்டும் ஒதுக்கப்படுவதில்லை என்றும் இதில் மிகுந்த கவனம் செலுத்தப்படுகிறது என்றும் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சு திட்டவட்டமாகத் தெரிவித்தது.
ஒரு நபர் இறந்துவிட்டால் அரசாங்கத்தின் சமூக நலத்திட்ட உதவிகளைப் பெறுவதற்கு ஆதார் அடையாள எண்ணைத் தொடர்ந்து பயன்படுத்த முடியும்.
எனவே, இத்தகைய அடையாள மோசடியை அல்லது ஆதார் எண்ணை தகாத முறையில் பயன்படுத்துவதைத் தடுக்கும் வகையில் அந்த ஆதார் எண்ணைச் செயலிழக்கச் செய்வது அவசியம் என அந்த அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
இதனிடையே, குறிப்பிட்ட ஆதார் எண்ணுக்கு உரியவர் காலமாகும் பட்சத்தில், அவரது இறப்புச்சான்றிதழைப் பெற்ற பிறகு குடும்ப உறுப்பினர்கள் அவரது மரணத்தை ‘மை ஆதார்’ (myAadhaar) இணையத்தளத்தில் தெரிவிக்க வேண்டும் எனத் தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) கேட்டுக்கொண்டுள்ளது.
தற்போது சிவில் பதிவு முறையைப் பயன்படுத்தும் 25 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பதிவு செய்யப்பட்ட இறப்புகளுக்கு myAadhaar போர்ட்டலில் ‘ஒரு குடும்ப உறுப்பினரின் மரணத்தைப் புகாரளித்தல்’ என்ற வசதியை இந்த ஆண்டு தொடக்கத்தில் ஆணையம் அறிமுகப்படுத்தியது.
இந்நிலையில், நாடு முழுவதும் மேற்கொண்ட தீவிர ஆய்வின் முடிவில், இரண்டு கோடிக்கும் அதிகமானோர் இறந்துவிட்ட நிலையில், அவர்களைப் பற்றிய விவரங்கள் ‘மை ஆதார்’ தளத்தில் புதுப்பிக்கப்படவில்லை என்பது உறுதியானது.
தொடர்புடைய செய்திகள்
இதையடுத்து, மாநில அரசின் உதவியுடன் அந்த இரண்டு கோடி ஆதார் எண்களும் செயலிழப்புச் செய்யப்பட்டுள்ளதாக மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சு தெரிவித்துள்ளது.

