தமிழக அரசுப் பள்ளிகளில் ‘தண்ணீர் மணி’ திட்டம்

1 mins read
c2330108-1dd1-46a2-891a-1cb4add08086
கோடைக் காலம் உட்பட பல்வேறு காலகட்டங்களில் உடல் நீரிழப்பு காரணமாகப் பல மாணவர்கள் பாதிக்கப்படுவது தெரியவந்துள்ளது. - கோப்புப்படம்: ஊடகம்

சென்னை: தமிழகப் பள்ளிகளில் ‘தண்ணீர் மணி’ திட்டம் அறிமுகமாகிறது.

மாணவர்கள் நாள்தோறும் நிர்ணயிக்கப்பட்ட அளவு தண்ணீர் குடிப்பதை உறுதிசெய்ய இத்திட்டம் உதவும் என அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

தமிழகப் பள்ளிகளில் லட்சக்கணக்கான மாணவர்கள் படிக்கின்றனர். இவர்களில் ஏழை மாணவர்களின் நலன் கருதி, சத்துணவுத் திட்டம் உட்பட பல்வேறு சிறப்புத் திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.

இந்நிலையில், கோடைக்காலம் உட்படபல்வேறு காலகட்டங்களில் உடல் நீரிழப்பு காரணமாகப் பல மாணவர்கள் பாதிக்கப்படுவது தெரியவந்துள்ளது.

இதனால் மாணவர்களின் அறிவாற்றல், கவனம், கல்வி செயல்திறனை கணிசமாகப் பாதிக்கும் என்று பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

அதில், பள்ளிகளில் தண்ணீர் நுகர்வுக்கு மாணவர்களை ஊக்குவிப்பது பல்வேறு நன்மைகளைத் தரும் என்றும் ‘தண்ணீர் மணி’ திட்டத்தை உடனே பள்ளிகளில் அமல்படுத்த அரசு, அரசு உதவி பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“இந்தத் திட்டத்தின்கீழ் பள்ளியில் ஒருநாளைக்கு 3 முறை தண்ணீர் இடைவேளை மணி அடிக்கப்படும். இது வழக்கமான ஒலியில் இருந்து மாறுபட்ட ஒலியில் ஒலிக்கப்பட வேண்டும்

“காலை 11 மணி, பிற்பகல் 1 மணி, 3 மணிக்கு ‘தண்ணீர் மணி’ அடிக்கப்படும். பள்ளிகளின் இடைவேளை நேரத்தைப் பொறுத்து நேரத்தை மாற்றிக்கொள்ளலாம்.

“பள்ளிகளுக்கு மாணவர்கள் தண்ணீர்ப் புட்டியைக் கட்டாயம் கொண்டுவர வேண்டும்,” என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்