சென்னை: பாராகுவே நாட்டின் அசுன்சியோன் நகரில் நடைபெற்ற 2026ஆம் ஆண்டுக்கான உலக ஸ்கேட்டிங் விளையாட்டுப் போட்டியில் பதக்கங்களை அள்ளிய தமிழகத்தைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகளுக்கு தமிழக முதல்வர் விஜய் தமது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் எக்ஸ் சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “உலக ஸ்கேட்டிங் போட்டிகளின் ஆண்கள் மாரத்தான் பிரிவில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ள தமிழ்நாட்டின் ஆனந்த்குமார், ஜூனியர் பெண்களுக்கான 3,000 மீட்டர் தொடர் ஓட்டப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற தமிழக வீராங்கனைகள் லட்சிதா, பிரகதி, ருத்தவா ஆகியோருக்கு எனது இதயமார்ந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும்,” என்று பதிவிட்டுள்ளார்.
மேலும்,இப்போட்டியில் தமிழக வீரர் ஆனந்த்குமார் ஏற்கெனவே 500 மீட்டர் பிரிவில் வெண்கலமும், 1,000 மீட்டர் பிரிவில் வெள்ளியும் வென்றிருந்த நிலையில், தற்போது மூன்றாவதாகத் தங்கப் பதக்கத்தையும் கைப்பற்றி அசத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
“இளம் தலைமுறையினருக்கு இவர்களது சாதனைகள் பெரும் ஊக்கத்தை அளிக்கும் என்பதில் ஐயமில்லை. பதக்கங்களை வென்று தமிழ்நாட்டிற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்த்துள்ள இவர்கள், விளையாட்டுத் துறையில் மேலும் பல சாதனைகளைப் படைத்து புதிய உயரங்களை எட்ட வாழ்த்துகிறேன்,” எனப் பதிவிட்டுள்ளார்.
பாரா ஆசிய விளையாட்டுப் போட்டி
மேலும், பாரா ஆசிய விளையாட்டுப் போட்டியில் டேபிள் டென்னிஸ் விளையாட்டில் பெண்கள் கிளாஸ் 9 பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ள தமிழக வீராங்கனை பேபி சகானா ரவிக்கு, முதல்வர் விஜய் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
ஜப்பானில் நடைபெற்றுவரும் ஐந்தாவது ‘பாரா’ ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் டேபிள் டென்னிஸ் விளையாட்டில் மகளிருக்கான 9வது பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்று தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்த்துள்ள வீராங்கனை பேபி சஹானா ரவிக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
மேலும், அவரது சாதனையைப் பாராட்டும் வகையில், தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.30 லட்சம் உயரிய ஊக்கத்தொகை வழங்கப்படும். வீராங்கனை பேபி சஹானா ரவி கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பால் இந்தச் சாதனையைப் படைத்துள்ளார். அவரது வெற்றி தமிழ்நாட்டின் இளம் பாரா விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்குப் புதிய உத்வேகத்தை அளிக்கும். அவர், எதிர்காலத்திலும் பல வெற்றிகளைப் பெற்று தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்க்க எனது வாழ்த்துகள் என எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
