புத்ராஜெயா: இவ்வாண்டு ஜனவரி முதல் நவம்பர் வரை மலேசியாவின் மூன்று விமான நிலையங்களில் 1.8 டன்னுக்கும் அதிகமான போதைப்பொருள் எனச் சந்தேகிக்கப்பட்ட பொருள்கள் இடைமறித்துப் பிடிக்கப்பட்டுள்ளன.
கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் வழியாகக் கடத்தப்படவிருந்த கிட்டத்தட்ட 6,000 உயிருள்ள விலங்குகளும் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக மலேசிய விமான நிலையங்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.
கோலாலம்பூர், பினாங்கு அனைத்துலக விமான நிலையங்கள், பேராக், ஈப்போவிலுள்ள சுல்தான் அஸ்லான் ஷா விமான நிலையம் ஆகியவற்றில் மேற்கொள்ளப்பட்ட வழக்கமான பயணிகள், பயணப் பெட்டிச் சோதனைகளில் 63 போதைப்பொருள் கடத்தல் முயற்சிகள் முறியடிக்கப்பட்டன. கைப்பற்றப்பட்ட மொத்த எடையில் 97 விழுக்காடு கஞ்சா என நம்பப்படுகிறது. இச்சம்பவங்கள் தொடர்பான விவகாரம் அரச மலேசியக் காவல்துறை அல்லது சுங்கத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.
விமான நிலையப் பாதுகாப்பு அதிகாரிகளின் விழிப்புணர்வு நாட்டின் நுழைவாயில்களைப் பாதுகாப்பதில் முக்கியப் பங்கு வகிப்பதாக நிர்வாக இயக்குநர் டத்தோ முகமது இசானி கானி கூறினார்.
இவ்வாண்டு பிப்ரவரி முதல் செப்டம்பர் வரை கோலாலம்பூர் முனையங்கள் இரண்டிலும் 16 வனவிலங்குக் கடத்தல் முயற்சிகள் முறியடிக்கப்பட்டன. ஜூன் 16ஆம் தேதி 4,400க்கும் மேற்பட்ட ஆமைகள் பறிமுதல் செய்யப்பட்டன. கடல் ஆமைகள், கிப்பன் குரங்குகள், பறவைகளும் மீட்கப்பட்டன.
மேலும், அக்டோபர் 26ஆம் தேதி மோப்ப நாய்ப் பிரிவின் முன்னோடிச் செயல்பாடுகள் தொடங்கப்படவிருந்தன. வனவிலங்குக் கடத்தலை அடையாளம் காண ‘டிராஃபிக்’ அனைத்துலகத் தென்கிழக்காசிய அமைப்புடன் இணைந்து ஊழியர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது.
