தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சமூக ஊடகத் தடையை எதிர்த்து நேப்பாளத்தில் போராட்டம்; 14 பேர் மரணம்

1 mins read
07a323f5-7ca5-48f8-a845-d1176575dafb
காத்மாண்டு உள்ளிட்ட பல முக்கிய நகரங்களில் இளையர்கள் பலர் ஆர்ப்பாட்டத்தில் குதித்தனர்.  - படம்: ராய்ட்டர்ஸ்

காத்மாண்டு: நேப்பாளத்தில் உள்ள இளைய தலைமுறையினர் நாட்டில் அதிக அளவில் ஊழல் நடப்பதற்காகவும் சமூக ஊடகங்களைத் தடை செய்ததற்காகவும் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

திங்கட்கிழமை (செப்டம்பர் 8) தலைநகர் காத்மாண்டு உள்ளிட்ட பல முக்கிய நகரங்களில் இளையர்கள் பலர் ஆர்ப்பாட்டத்தில் குதித்தனர். இதில் குறைந்தது 14 பேர் மாண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

மேலும் 200க்கும் அதிகமானவர்களுக்குக் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், நேப்பாளத்தின் மனித உரிமை ஆணையம் காவல்துறையின் கடுமையான நடவடிக்கையைக் கண்டித்துள்ளது.

நேப்பாள அரசாங்கம் இளையர்களின் பிரச்சினைகளைக் கேட்க வேண்டும், அவர்களை ஒடுக்கக் கூடாது என்றும் ஆணையம் கேட்டுக்கொண்டது.

பத்தாயிரத்திற்கும் அதிகமான இளையர்கள் காத்மாண்டு, பொக்ஹாரா, புட்வால், தாரன் உள்ளிட்ட இடங்களில் பேரணி நடத்தினர்.

இளையர்களின் கூட்டத்தைக் கலைக்க காவல்துறையினர் ரப்பர் தோட்டாக்களைக் கொண்டு சுட்டனர். பின்னர் கண்ணீர்ப் புகைக் குண்டுகளையும் தண்ணீர்ப் பீய்ச்சிகளையும் அவர்கள் பயன்படுத்தினர்.

கடந்த வாரம் (செப்டம்பர் 5) இன்ஸ்டகிராம், ஃபேஸ்புக், எக்ஸ், வாட்ஸ்அப் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட சமூக ஊடகங்களை நேப்பாளம் முடக்கியது.

முடக்கப்பட்ட சமூக ஊடகங்கள் நேப்பாளத்தின் விதிமுறைகளைப் பின்பற்றவில்லை என்று கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்