ஒபான்: பிரான்சின் இடைநிலைப் பள்ளி ஒன்றில் 14 வயது மாணவன் வேட்டைத் துப்பாக்கியால் சுட்டதில் தலைமை ஆசிரியரும் ஓர் ஆசிரியரும் காயமடைந்தனர். திங்கட்கிழமை (அக்டோபர் 12) இடம்பெற்ற அச்சம்பவத்தில், மற்றொருவர் மீது துப்பாக்கிக் குண்டு உரசிச் சென்றதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.
கிட்டார் உறைக்குள் துப்பாக்கியை மறைத்து பள்ளிக்குக் கொண்டு வந்த அந்த மாணவன், குறைந்தது நான்கு முறை சுட்டுள்ளான். அதில் 53 வயது தலைமை ஆசிரியரின் தொடைகளிலும் கீழ்முதுகிலும் காயங்கள் ஏற்பட்டன. 37 வயது ஆசிரியரின் தொடையில் குண்டடிபட்டது.
ஊழியர் ஒருவர் அம்மாணவனை மடக்கிப்பிடித்து துப்பாக்கியைப் பறிமுதல் செய்தார். காயமடைந்த இருவரின் நிலைமையும் சீராக இருப்பதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
அண்மைக் காலமாக பிரான்சில் அதிகரித்து வரும் பள்ளி மாணவர் போராட்டங்களுக்கும் இச்சம்பவத்திற்கும் தொடர்பில்லை என்று காவல்துறை கூறியது.
“அவன் சுடத் தொடங்கியபோது, ‘நான் மாணவர்களைச் சுடப்போவதில்லை. ஆசிரியர்களை மட்டுமே சுட வந்தேன்’ எனக் கூறினான்,” என்று சம்பவத்தை நேரில் பார்த்த மாணவி சாரா ஏஎஃப்பி செய்தியிடம் கூறினார்.
“பள்ளிகளால் மட்டும் வன்முறையைத் தடுத்துவிட முடியாது. சமூக ரீதியிலான தீர்வு தேவை” என்று கல்வியமைச்சர் எட்வார்ட் கெஃப்ரே குறிப்பிட்டார்.
சம்பவ இடத்தைப் பார்வையிட்ட உள்துறை அமைச்சர் லோரண்ட் நுனெஸ், மாணவனின் பெற்றோரும் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.
கொலை முயற்சி குற்றத்தின்கீழ் வழக்குப் பதிவுசெய்யப்பட்டு விசாரிக்கப்படுகிறது.
