மேலும் 200,000 குழந்தைகள் உயிரிழக்கக்கூடும்: பில் கேட்ஸ் எச்சரிக்கை

1 mins read
a75ef4c3-1326-4f1b-8488-52dd922b55f8
நிதியுதவி நிறுத்தம் நிரந்தரமானால், குழந்தை இறப்பு எண்ணிக்கை 2045ஆம் ஆண்டிற்குள் 12 மில்லியன் முதல் 16 மில்லியன்வரை கூடுதலாகப் பதிவாகலாம் என்று கேட்ஸ் அறநிறுவனம் எச்சரித்திருக்கிறது. - படம்: ராய்ட்டர்ஸ்

லண்டன்: கடந்த ஆண்டைக்காட்டிலும் 2025ல் கூடுதலாகக் கிட்டத்தட்ட 200,000 பிள்ளைகள் தங்களது ஐந்தாவது பிறந்தநாளுக்குள் உயிரிழக்க நேரிடலாம் என்று கேட்ஸ் அறநிறுவனம் எச்சரித்துள்ளது.

பல பத்தாண்டுகளாக எட்டப்பட்ட வளர்ச்சியைக் கீழறுக்கும் வகையில், அனைத்துலக நிதியுதவிகள் நிறுத்தப்படுவதே அதற்குக் காரணம் என்கிறார் உலகப் பெருஞ்செல்வந்தர்களுள் ஒருவரான திரு பில் கேட்ஸ்.

2024ஆம் ஆண்டில் 4.6 மில்லியன் குழந்தைகள் மரணமடைந்ததாக மதிப்பிடப்பட்ட நிலையில், இவ்வாண்டு அவ்வெண்ணிக்கை 4.8 மில்லியனாக உயரக்கூடும் என்பது அவரது எச்சரிக்கை.

கடந்த 2000வது ஆண்டில் இருந்த குழந்தை இறப்பு எண்ணிக்கை, தற்போது கிட்டத்தட்ட பாதியாகக் குறைந்துவிட்டது.

“கடந்த பல பத்தாண்டுகளாக, குழந்தைகளின் உயிரைக் காப்பதில் சீரான முன்னேற்றம் இருந்துவந்தது. ஆனால் இப்போது சவால்கள் தலைதூக்கியுள்ளதால் அந்த முன்னேற்றம் தலைகீழாகச் செல்கிறது,” என்று கேட்ஸ் அறநிறுவனத்தின் ஆண்டறிக்கையில் திரு கேட்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாண்டுத் தொடக்கத்தில் உதவித் திட்டங்களுக்கான நிதியுதவியை நிறுத்துவதாக அமெரிக்கா அறிவித்தது. அதனைத் தொடர்ந்து, பிரிட்டன், ஜெர்மனி போன்ற நாடுகளும் அதே முடிவை எடுத்தன.

ஒட்டுமொத்தத்தில், 2024ஆம் ஆண்டை ஒப்புநோக்க 2025ல் சுகாதாரத்திற்கான நிதியுதவி 27 விழுக்காட்டிற்கும் கீழே இறங்கிவிட்டதாக கேட்ஸ் அறநிறுவன அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

இந்த நிதியுதவி நிறுத்தம் நிரந்தரமானால், குழந்தை இறப்பு எண்ணிக்கை 2045ஆம் ஆண்டிற்குள் 12 மில்லியன் முதல் 16 மில்லியன்வரை கூடுதலாகப் பதிவாகலாம் என்றும் அது எச்சரித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்