பெட்டாலிங் ஜெயா: 2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் இவ்வாண்டு செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில், வன்போலிக் காணொளிகள், பொய்ச் செய்திகள், மோசடி தொடர்பான உள்ளடக்கங்கள் உள்ளிட்ட குறைந்தது 367,537 தீங்குவிளைவிக்கும் இணைய உள்ளடக்கங்கள் அகற்றப்பட்டுள்ளதாக மலேசியாவின் தொடர்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
மலேசியத் தொடர்பு, பல்லூடக ஆணையம் விடுத்த கோரிக்கைகளைத் தொடர்ந்து, சேவை வழங்குநர்கள் இந்த உள்ளடக்கங்களை அகற்றியதாக அமைச்சு குறிப்பிட்டது.
அகற்றப்பட்ட மொத்த உள்ளடக்கங்களில், மோசடி தொடர்பான உள்ளடக்கங்களே பெரும்பங்கு வகிக்கின்றன. ஆணையம் விடுத்த 316,215 கோரிக்கைகளில் 303,871 உள்ளடக்கங்கள் அகற்றப்பட்டுள்ளன.
பல்வேறு போலி, ஆள்மாறாட்டக் கணக்குகளை முடக்கியதும் இதில் அடங்கும் என அமைச்சு கூறியது. மேலும், வன்போலி உள்ளடக்கங்களை அகற்றக் கோரிய 14,392 கோரிக்கைகளில் 13,234 உள்ளடக்கங்கள் அகற்றப்பட்டுள்ளதாகவும் வழக்கமான பொய் உள்ளடக்கங்களை அகற்றக் கோரிய 57,600 கோரிக்கைகளில் 50,432 உள்ளடக்கங்கள் அகற்றப்பட்டுள்ளதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.
இதனிடையே, இணையப் பாதுகாப்புச் சட்டம் 2025ன் கீழ், உரிமம் பெற்ற சேவை வழங்குநர்களிடம் சமர்ப்பிக்கப்பட்ட மோசடி தொடர்பான உள்ளடக்கங்களை அகற்றுவதற்கான ஐந்து கோரிக்கைகளும் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
“2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1ஆம் தேதி முதல் 2026ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி வரை தொடர்பு, பல்லூடகச் சட்டம் 1998ன் பிரிவு 233ன் கீழ் பொய்யான உள்ளடக்கங்கள் தொடர்பான வழக்குகளில் அமலாக்க, சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதன்படி, மொத்தம் 18 வழக்குகளில் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 32 வழக்குகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 68 வழக்குகளுக்கு எச்சரிக்கைக் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன. மேலும் 30 வழக்குகள் தொடர்ந்து விசாரணையில் உள்ளன,” என நவம்பர் 26ஆம் தேதியிட்ட நாடாளுமன்ற எழுத்துபூர்வ பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மூன்று ஆண்டுகளில் கண்டறியப்பட்டு அகற்றப்பட்ட வன்போலி உள்ளடக்கங்கள், போலிக் கணக்குகள், மின்னிலக்க மோசடிகளின் எண்ணிக்கை குறித்த புள்ளிவிவரங்களையும் தீங்குவிளைவிக்கும் உள்ளடக்கங்களைக் கண்டறிந்து அகற்றுவதற்கான தற்போதைய நடவடிக்கைகளையும் கேட்டறிந்த போர்ட் டிக்சன் நாடாளுமன்ற உறுப்பினர் அமினுதீன் ஹருனின் கேள்விக்குப் பதிலளிக்கும் விதமாக அமைச்சு இத்தகவல்களை வெளியிட்டுள்ளது.
