ஷா ஆலம்: கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திலும் செப்பாங்கிலும் நடத்தப்பட்ட அதிரடிச் சோதனைகளில் மலேசியக் காவல்துறையினர் 12 பேரைக் கைதுசெய்தனர்.
அவர்களிடமிருந்து 33.4 மில்லியன் மலேசிய ரிங்கிட் (S$10.43) மதிப்பிலான கஞ்சா மொட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஆகஸ்ட் 28 - செப்டம்பர் 21 காலகட்டத்தில் அந்தச் சோதனைகள் நடத்தப்பட்டன. பிடிபட்டோரில் வெளிநாட்டு ஆடவர் நால்வரும் பெண்கள் எழுவரும் அடங்குவர். மலேசிய ஆடவர் ஒருவரும் சிக்கினார்.
அவர்களிடமிருந்து 418 கிலோ எடையுள்ள 671 கஞ்சா பொட்டலங்கள் கைப்பற்றப்பட்டதாக சிலாங்கூர் காவல்துறைத் தலைவர் ஷஸெலி கஹார் தெரிவித்தார்.
“வேலை வாய்ப்புகள், சுற்றுப்பயணத் திட்டங்கள் என வாக்குறுதி அளிக்கப்பட்டு, அவர்கள் தங்கள் நாடுகளிலிருந்து வரவழைக்கப்பட்டனர். மலேசியா வந்ததும் தங்களுக்குச் சொந்தமில்லாத பெட்டிகளை எடுத்துச் செல்லுமாறு அவர்கள் பணிக்கப்பட்டனர். அப்பெட்டிகளுக்குள் போதைப்பொருள்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன,” என்று திரு கஹார் விவரித்தார்.
கடத்தல்காரர்களுக்கு போதைப்பொருள்களை விநியோகிக்கும் முகவராக அந்த மலேசிய ஆடவர் செயல்பட்டதாக நம்பப்படுகிறது என்றும் கைதுசெய்யப்பட்ட அனைவரும் வெவ்வேறு கடத்தல் கும்பல்களைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர் சொன்னார்.
சந்தேகப் பேர்வழிகளுக்குச் சொந்தமான இரண்டு கார்கள், வெளிநாட்டுப் பணம் உட்பட 37,700 மலேசிய ரிங்கிட் மதிப்புள்ள சொத்துகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
கைதுசெய்யப்பட்டவர்களில் இதுவரை ஆறு பேர் மீது ஆபத்தான போதைப்பொருள் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. எஞ்சிய அறுவரிடம் மேலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
சந்தேகப் பேர்வழிகள்மீது மலேசியாவில் இதுவரை எந்தக் குற்றப் பின்னணியும் இல்லை என்ற திரு கஹார், பிடிபட்ட வெளிநாட்டவர்கள் சமூக வருகை விசாவைப் பயன்படுத்தி, மலேசியாவிற்குள் நுழைந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
