கொழும்பு: ‘தித்வா’ புயலால் இலங்கையில் 46 பேர் மரணமடைந்தனர். 23 பேரைக் காணவில்லை என்று அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அடுத்த சில மணிநேரத்தில் புயல், தீவின் பல பகுதிகளில் தீவிரமடையும் என்று வானிலை ஆய்வகம் எச்சரித்திருக்கிறது.
உயிரிழந்தவர்களில் அதிகமானோர் நிலச்சரிவால் மாண்டதாகக் கூறப்பட்டது. நாட்டின் மத்திய, கிழக்குப் பகுதிகள் கடுமையாகச் சேதமுற்றன.
நாடு முழுதும் ஏறக்குறைய 44,000 பேர் பள்ளிகளிலும் மற்றப் பொது இடங்களிலும் தஞ்சம் புகுந்துள்ளனர். வீட்டுக் கூரைகளில் பலர் உதவி கேட்டு நிற்பதாகவும் கூறப்பட்டது. பேரிடர் நிர்வாக நிலையம் வெளியிட்ட அறிக்கையில் அந்த விவரங்கள் இடம்பெற்றுள்ளன.
பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. ரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. பலத்த மழையால் கொழும்புப் பங்குப் பரிவர்த்தனை முன்கூட்டியே நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
“கடுமையாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகளை நாங்கள் தொடர்கின்றோம். நிலச்சரிவால் சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் சில கிராமங்களை அணுகுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இயன்றவரை அனைவரையும் பாதுகாப்பான இடங்களுக்குக் கூட்டிச்செல்ல ஆன அனைத்தையும் செய்கின்றோம்,” என்று அவசரக்கால செயலாக்கப் பிரிவு இயக்குநர் பிரிகேடியர் எஸ் தர்மவிக்ரம ராய்ட்டர்சிடம் தெரிவித்தார்.
நிலைமை மோசமடைந்தால் சில விமானச் சேவைகள் தென்னிந்தியாவின் திருவனந்தபுரம், கொச்சின் விமான நிலையங்களுக்குத் திருப்பிவிடப்படக்கூடும் என்று துறைமுக, சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அனுர கருணத்திலக செய்தியாளர்களிடம் கூறினார்.

