மலேசியாவில் விவாதத்தைக்கிளப்பிய 5ஜி விவகாரம்

2 mins read
7cdd4639-edad-4888-a2fa-93ac6cd78733
மலேசியாவின் 2வது 5ஜி கட்டமைப்பை அமைக்கும் உரிமையை ‘யு மொபைல்’ என்ற நிறுவனத்துக்கு வழங்கியிருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியிருக்கிறது. - படம்: யு மொபைல்/ ஃபேஸ்புக்

கோலாம்பூர்: மலேசியாவில் ‘5ஜி’ சேவை வழங்க சிறிய தொலைத் தொடர்பு நிறுவனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது பெரும் விவாதத்தைக் கிளப்பியிருக்கிறது.

மின்னிலக்க தொடர்பு அமைச்சர் ஃபாமி ஃபட்சில் இதன் தொடர்பில் நவம்பர் 7ஆம் தேதி நாடாளுமன்றத்தில் எடுக்கப்பட்ட முடிவை தற்காத்துப் பேசியுள்ளார்.

மலேசியாவில் தொலை தொடர்புத் துறையில் செல்காம்டிஜி, மேக்சிஸ் போன்ற முன்னணி நிறுவனங்கள் செயல்படுகின்றன. இவற்றுக்கு நாடு முழுவதும் வாடிக்கையாளர்கள் அதிகம் உள்ளனர். மேலும் தொலை தொடர்பு வசதிகளையும் அதிகம் வைத்துள்ளன.

இந்த நிலையில் இரண்டாவது ‘5ஜி’ கட்டமைப்பை அமைக்கும் ஒப்பந்தக் குத்தகையை ‘யு மொபைல்’ நிறுவனம் வென்றுள்ளதாக நவம்பர் 1ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து பெரும் விவாதம் கிளம்பியிருக்கிறது.

மலேசிய மாமன்னரான ஜோகூர் சுல்தான் இப்ராகிமும் சிங்கப்பூரின் முதலீட்டு நிறுவனமான தெமாசெக்கும் இந்த நிறுவனத்தில் குறிப்பிடத்தக்க பங்கை வைத்துள்ளன. இந்நிறுவனத்துக்கு பெர்ஜயா குழுமத்தின் நிறுவனர் வின்சென்ட் டான் தலைவராக இருக்கிறார்.

திரு ஃபாமி ஃபட்சில், அரசாங்கத்தின் முடிவு தகுதி அடிப்படையிலானது என்று வலியுறுத்தினார்.

ஆனால் ஒப்பந்தக் குத்தகை விவரங்கள் அதிகம் வெளியில் தெரியவில்லை என்று கூறப்படுகிறது

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான வன் சைஃபூல் வன் ஜான், நவம்பர் 7ஆம் தேதி நாடாளுமன்றத்தில் பேசியபோது, “ஆரம்பத்திலேயே அலைக்கற்றையைப் பெறுவதற்கான விதிமுறைகள் பொதுவெளியில் தெரிந்திருந்தால் இப்போது கேள்வி எழுந்திருக்காது என்று கூறியிருந்தார்.

முன்பு முன்னிலையில் இருந்த மேக்சிசுக்கு சீனத் தொலைத் தொடர்பு நிறுவனமான ஹுவாவெயுடன் வலுவான உறவு இருந்ததால் அந்த ஒப்பந்தக் குத்தகையை மேக்சிஸ் கைப்பற்றும் என எதிர்பார்க்கப்பட்டது.

மற்றொரு பெரிய நிறுவனமான ‘செல்காம்டிஜி’, 2022ஆம் ஆண்டு ஒருங்கிணைக்கப்பட்ட பிறகு தொலைத் தொடர்பு சந்தையில் ஏறக்குறைய பாதியை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறது. மேக்சிஸ், யு மொபைல் ஒன்றுசேர்ந்தாலும் அவற்றைவிட 25,000க்கும் மேற்பட்ட இடங்களில் விரிவான கட்டமைப்பை வைத்துள்ளது. இதனால் ‘5ஜி’ கட்டமைப்பை விரைவுபடுத்த அந்நிறுவனத்தை செல்காம்டிஜி அனுமதிக்கும் என சொல்லப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்