இலங்கையில் சூறாவளிக்கு 600 பேர் பலி; மீண்டும் நிலச்சரிவு அபாயம்

2 mins read
c0a20449-c5f1-4058-bbf1-041cc89178ae
‘டித்வா’ சூறாவளியைத் தொடர்ந்து, கண்டியில் தமது உடைமைகளை மீட்டு, ரயில் தண்டவாளத்தில் போட்டிருக்கும் குடியிருப்பாளர். - படம்: ஏஎஃப்பி
multi-img1 of 2

கொழும்பு: இலங்கை அதிகாரிகள் மீண்டும் புதிய நிலச்சரிவுகள் ஏற்படக்கூடிய வாய்ப்பு இருக்கிறது என்று ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 7) எச்சரித்துள்ளனர்.

ஏற்கெனவே சக்திவாய்ந்த சூறாவளி அந்நாட்டின் பல பகுதிகளை புரட்டிப் போட்டிருப்பதால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 618க்கு அதிகரித்துள்ளது.

இரண்டு மில்லியனுக்கும் மேற்பட்ட, அதாவது நாட்டின் மக்கள்தொகையில் பத்து விழுக்காட்டினர் டித்வா சூறாவளியால் ஏற்பட்ட கனமழையாலும் நிலச்சரிவாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை இல்லாத அளவுக்குச் சூறாவளி நாட்டைச் சேதப்படுத்தியிருக்கிறது.

புயலால் மழை அதிகரித்துள்ளதாகவும் மத்திய மலைப்பகுதி, வடமேற்கு மத்திய நிலங்கள் உள்ளிட்ட மலைப்பகுதிகள் நிலைத்தன்மையற்று இருப்பதாகவும் நாட்டின் பேரிடர் நிர்வாக நிலையம் அறிவித்துள்ளது.

டிசம்பர் 7ஆம் தேதி நிலச்சரிவுகளால் துண்டிக்கப்பட்ட இடங்களுக்கு அத்தியாவசியப் பொருள்களை விநியோகிக்க ஹெலிகாப்டர்களும் விமானங்களும் பயன்படுத்தப்பட்டன.

அதே நாளில் மியன்மாரிலிருந்து ஒரு விமானம் நிறைய நிவாரணப் பொருள்கள் வந்ததாக இலங்கை விமானப் படை கூறியது. இது, வெளிநாட்டிலிருந்து வந்த அண்மைய உதவியாகும். இதுவரை 618 பேர் உயிரிழந்ததை அரசாங்கம் உறுதிப்படுத்தியிருக்கிறது.

அவர்களில் தேயிலை வளரும் செழிப்பான மத்தியப் பகுதியைச் சேர்ந்த 464 பேரும் அடங்குவர். எஞ்சிய 209 பேரின் நிலை இன்னமும் தெரியவில்லை.

டிசம்பர் 7ஆம் தேதி வெள்ளம் வடியத் தொடங்கியதால் அரசாங்கம் அமைத்துள்ள முகாம்களில் தங்கியிருந்தோரின் எண்ணிக்கை 225,000லிருந்து 100,000க்கு குறைந்துள்ளது என்று பேரிடர் நிர்வாகக் குழு கூறியது.

ஏறக்குறைய 75,000 வீடுகள் சேதமடைந்தன. இவற்றில் 5,000 வீடுகள் முற்றிலுமாக அழிந்துவிட்டன.

இதற்கிடையே இலங்கை அரசாங்கம், கூடுதலாக 200 மில்லியன் யுஎஸ் டாலர் நிதியுதவி கேட்டு அனைத்துலகப் பண நிதியத்துக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதனைப் பரிசீலித்து வருவதாக நிதியம் டிசம்பர் 5ஆம் தேதி தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்