90 வயதில் முதன்முறையாகத் தந்தையான 'மிஸ்டர் பிக்கல்ஸ்'

1 mins read
64e5928d-e4b9-4323-96d2-a632ab20f44f
90 வயதான 'மிஸ்டர் பிக்கல்ஸ்' ஆமையும் அதன் மூன்று குஞ்சுகளும். படம்: ஹூஸ்டன் விலங்கியல் தோட்டம் -

ஹூஸ்டன்: அமெரிக்காவில் உள்ள ஒரு விலங்கியல் தோட்டத்தில் இருக்கும் ஆக வயதான விலங்கு, தனது 90ஆவது வயதில் மூன்று குஞ்சுகளுக்குத் தந்தையாகியுள்ளது.

ஹூஸ்டன் விலங்கியல் தோட்டத்தில் உள்ள 'மிஸ்டர் பிக்கல்ஸ்' என்ற அந்த ஆமையும் அதன் இணையும் சேர்ந்து டில், கெர்கின், ஹலபேன்யோ என்ற மூன்று குஞ்சுகளின் பெற்றோராகியுள்ளன.

அம்மூன்று ஆமைக்குஞ்சுகளின் வரவு அவ்விலங்கியல் தோட்ட ஊழியர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

'மிஸஸ் பிக்கல்ஸ்' மூன்று முட்டைகளைப் போட்டிருந்ததை அங்குள்ள ஊழியர்களில் ஒருவர் தற்செயலாகக் கண்டார். உடனடியாக அம்முட்டைகளை விலங்குப் பராமரிப்புக் குழு பத்திரப்படுத்தியது.

"மடகாஸ்கரைப் பூர்வீகமாகக் கொண்ட அந்த இன ஆமைகளுக்கு ஹூஸ்டன் மண் பொருத்தமானதாக இராது. அம்முட்டைகளை அந்த ஊழியர் பார்த்திராவிடில் அவை தாமாக குஞ்சு பொரித்திருக்க வாய்ப்பில்லை," என்று ஒரு வலைப்பதிவு வழியாக அவ்விலங்கியல் தோட்டம் தெரிவித்தது.

வளர்ந்தபின் அந்த ஆமைக்குஞ்சுகள் அவ்விலங்கியல் தோட்டத்தின் ஊர்வன, நகர்வன உயிரிகள் இருக்கும் பகுதியில் விடப்படும் எனக் கூறப்பட்டது.

'மிஸ்டர் பிக்கல்ஸ்' 36 ஆண்டுகளாகவும் 'மிஸஸ் பிக்கல்ஸ்' 27 ஆண்டுகளாகவும் ஹூஸ்டன் விலங்கியல் தோட்டத்தில் இருந்து வருகின்றன.