ஜகார்த்தா: இந்தோனீசிய அரசாங்கம், அதன் ராணுவம் கையாளும் கூடுதல் பொறுப்புகளை அந்நாட்டின் ஆகப் பெரிய செய்தித்தாளில் முழுப் பக்க விளம்பரமாக அறிவித்துள்ளது.
இந்தோனீசிய தற்காப்பு அமைச்சு திங்கட்கிழமை (செப்டம்பர் 22) கொம்பாஸ் (Kompas) செய்தித்தாளில் விளம்பரம் செய்தது. இந்தோனீசிய ராணுவம், தற்காப்புடன் தொடர்பற்ற அம்சங்களைக் கையாள்வதை அமைச்சு விளம்பரத்தின் மூலம் தற்காத்துப் பேசியது.
இந்தோனீசிய அதிபர் பிரபோவோ சுபியாந்தோவின்கீழ் ராணுவத்தின் பங்கு அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது. அது கண்டனத்துக்கு உள்ளாகிவரும் வேளையில் இந்த விளம்பரம் இடம்பெற்றுள்ளது.
சென்ற ஆண்டு தேர்தலில் வெற்றிபெற்று இந்தோனீசிய அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட திரு சுபியாந்தோ, ராணுவத்தைச் சேர்ந்தோருக்கு அரசாங்கத்தில் வழங்கப்படும் பொறுப்புகளை அதிகரித்துள்ளார். அதோடு, தமது திட்டத்தைச் செயல்படுத்த அவர் ராணுவத்தைப் பயன்படுத்தியிருக்கிறார்.
அதனைத் தொடர்ந்து உலகின் மூன்றாவது ஆகப் பெரிய ஜனநாயக நாடான இந்தோனீசியா, மீண்டும் சர்வாதிகார ஆட்சிக்குத் திரும்பக்கூடும் என்ற அச்சம் மாணவர்கள், ஆர்வலர்களிடையே தலைதூக்கியுள்ளது.
இந்தோனீசியா, ஒரு காலத்தில் திரு சுகார்த்தோ அதிபராக இருந்தபோது சர்வாதிகார முறையில் ஆட்சி செய்யப்பட்டது.
‘இனி ராணுவம் மட்டுமல்ல: இந்தோனீசிய பாணியில் மக்கள் தற்காப்பு’ (No Longer Just Military: Indonesian-style People’s Defence) என்ற தலைப்பில் கொம்பாஸ் செய்தித்தாளில் விளம்பரம் வெளியானது. செழிப்பாக இருத்தல், துறைகளுக்கு இடையே ஒத்துழைப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தற்காப்பு அமைச்சின் கொள்கைகள் விரிவுபடுத்தப்பட்டதுடன் பொதுமக்கள் தற்காப்பு அமைப்பாக உருமாறியுள்ளது என்று அந்த விளம்பரத்தில் கூறப்பட்டுள்ளது.
பள்ளிகளில் இலவச உணவு வழங்குவது, மருந்து உற்பத்தி, வேளாண் திட்டங்களைச் செயல்படுத்துவது, பனை எண்ணெய்த் தோட்டங்களைத் தங்கள்வசம் கொண்டுவருவது போன்ற நடவடிக்கைகளுக்கு திரு சுபியாந்தோ ராணுவத்தைப் பயன்படுத்தியிருக்கிறார்.
தொடர்புடைய செய்திகள்
ஆயிரக்கணக்கான இளம் பட்டதாரிகளுக்குத் தற்காப்பு அமைச்சு பயிற்சியளித்துள்ளதாகவும் விளம்பரத்தில் தெரிவிக்கப்பட்டது.